இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோன்னா செபாஸ்டியன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் நடித்துள்ள லியோ படத்தின் பிரம்மாண்டமான ரிலீஸுக்காக படக்குழு மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். முதன்முதலில் வெளியிடப்பட்ட லியோ படத்தின் ப்ரோமோ வீடியோவிற்குள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனையடுத்து, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாப்பாத்திரங்களை வெளியிடும் வகையில் க்ளிம்ப்ஸ் வீடியோக்களையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இவ்வாறு அடுத்தடுத்து லியோ படக்குழு வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் லியோ படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில், நடிகர் விஜய் பாடிய “நான் ரெடி” பாடலின் ‘lyric’ வீடியோவும் யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இதுவரை சுமார் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசிஸ்டன்ட் இயக்குனரான விஷ்ணு எடவன் என்பவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
ஏற்கனவே, இதற்கு முன்பு ‘மாஸ்டர்’ படத்தில் ‘பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை” என்ற பாடலையும் இவர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் படக்குழு முழுவீச்சில் படத்தை பிரம்மாண்டமான ரிலீஸ் செய்வதற்காக வேலை செய்து கொண்டிருக்கையில், மறுபக்கம் எப்பவும் போல விஜய் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டுத்தான் இருக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் எத்தனை நடிகர்களின் படம் ரிலீஸ் ஆனாலும், தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு மட்டும் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, பின்பு என பிரச்சனைகள் வருவது வழக்கம்தான். அந்த வகையில், படத்தின் ‘நான் ரெடி’ பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பாட்டு ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பினாலும், பாடல் வரிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும்,
போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி அவர்கள் செய்தி ஊடகங்களிடம் புகார் அளித்தார். ஏற்கனவே, நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது, பாடல் வரிகளும் போதைப் பொருள்களைக் கொண்டாடும் வகையில் இருப்பதால், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையடுத்து,
நேற்று ‘நான் ரெடி’ பாடல்களில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, “பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டால கொண்டா சேயேஸ் அடிக்க பத்த வச்சு புகைய விட்டா பவரு கிக்கு'” போன்ற சில வரிகளையும், சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளையும் ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம் நீக்கி உள்ளது என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அரசியல்வாதி ராஜேஸ்வரி பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி.எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்.. உண்மை பணத்தைவிட வலிமையானது என கர்வம் நிறைந்த பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.