விஜய் ரசிகர்களை புஸ்ஸி ஆனந்த் இவ்வளவு கேவலமா டீல் பண்ணலாமா.?

0
Follow on Google News

“நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்”, “விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார்” விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு என டிசைன் டிசைனா நடிகர் விஜயைச் சுற்றி எக்கச்சக்கமான பிரச்சினைகள் சுற்றிக் கொண்டிருந்தாலும், நடிகர் விஜய் தன் வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் நடிகர் விஜயின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களால் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் ‘விஜய்யின் பெயரை கெடுத்து விடுவார் போல’ என்றெல்லாம் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு இணையாக தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணி, இளைஞர் அணி, வர்த்தக அணி, மீனவரணி என நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அத்தனை மன்றங்களையும் புஸ்ஸி ஆனந்த்தான் நிர்வகித்து வருகிறார். அந்தளவிற்கு நடிகர் விஜய்யின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகத் தொடங்கப்பட்ட, விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என அனைத்திலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா? என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பும்போதெல்லாம், மழுப்பலாகவும் அதை விஜய்தான் அறிவிக்கவேண்டும் என்றுகூறி வரும் புஸ்ஸி ஆனந்த், கடந்த ஏப்ரல் மாதம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக, விக்கிரவாண்டியில் மிகப்பெரிய படையோடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு நடிகர் விஜய் தான் உத்தரவிட்டார் என்று புஸ்ஸி ஆனந்த் கூறவே,

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தன. அதனைத் தொடர்ந்து, காமராஜர், காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது என்று புஸ்ஸி ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பத்தாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா, விஜய் பயிலகம் என நடிகர் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகள் அத்தனையிலும் பக்கபலமாக இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். விஜயின் அப்பா SAC உட்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்று ரசிகர்கள் என பலரும் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக விமர்சனம் செய்தாலும், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாத விஜய், அவரை எப்போதுமே பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு விஜய்யின் வார்த்தையை மீறி அவர் எந்தச் செயலையும் செய்யமாட்டார் என்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு விஜய்யின் ‘வாய்ஸ்’ ஆக விளங்கும் புஸ்ஸி ஆனந்த் நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் என்று சொன்ன ரசிகையிடம், பெயரை சொல்லக்கூடாது தளபதி என்றே சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது மட்டுமின்றி இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதே போல், விருந்து நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை புஸ்ஸி ஆனந்த் கோபமாக அடித்து விரட்டிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து தனது அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்டு வரும் விஜய், மற்ற அரசியல் கட்சிகளை போலன்றி மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கும் நிலையில், புஸ்ஸி ஆனந்தின் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் விஜய்யின் அரசியல் நகர்வில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று விஜய் ரசிகர்கள் புஸ்ஸி ஆனந்தை கழுவி ஊத்துகின்றனர்.