எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி.
இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாக்க முக்க’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.
இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் பிச்சைக்காரன் படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங்போதுதான் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்ட அவருக்கு மீள முடியாத துயரமாக அமைந்தது அவரது மகள் மீராவின் மரணம். ஏதோ காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார்.
மகளின் மறைவுக்கு பின்னர் மிகவும் சோகமாக இருந்த விஜய் ஆன்டனி கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” என்று குறிப்பிட்டு இருப்பார்.
மகளின் இறப்பால் விஜய் ஆண்டனி உடைந்தே போய்விட்டார். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அது ஹிட்லர் என்ற படம் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் ஆண்டனி சமீப காலங்களில் செருப்பு அணியாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி பெருசா காரணம் எதும் இல்லை. போட வேண்டம்னு தோனுச்சு போடல, செருப்பு போடனும்னு தோனுச்சுனா திரும்ப போடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய விஜய் ஆண்டனி, “இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. விபத்திற்கு பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி” என்றார்.