கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பவர்தான் நடிகர் விஜய் ஆண்டனி. புரியாத வார்த்தைகளைக் கோர்த்து இசையமைத்து பாடலை ஹிட் கொடுப்பதில் திறைமை வாய்ந்தவர் விஜய் ஆண்டனி. அண்மையில், இவரது மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் தள்ளியது. விஜய் ஆண்டனி மகள் மீராவின் உயிரிழப்பு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் மீராவின் தற்கொலை குறித்து பல்வேறு டிஜிட்டல் மீடியாக்களும் கண்டபடி வதந்திகளை பரப்பி வருகின்றன.
மேலும், மகளைப் பறி கொடுத்த விஜய் ஆண்டனி மவுனம் காத்து வந்த நிலையில், திடீரென “என் மகளுடன் சேர்ந்து நானும் இறந்துவிட்டேன், அவளுக்காக நேரம் ஒதுக்கப் போகிறேன்; இனி அவள் பெயரில் செய்யப் போகும் நல்ல விஷயங்களை எல்லாம் அவளே தொடங்கி வைப்பாள்” என்று சோகம் கலந்த நெகிழ்ச்சியுடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகரும் பத்திரிக்கையாளருமான, பயில்வான் ரங்கநாதன் விஜய் ஆண்டனி மகளின் இறப்பு குறித்தும், மீராவின் இறுதிச் சடங்கு வரை முற்றிலுமாக கவர் செய்த தனியார் ஊடகங்கள் குறித்தும் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மீராவின் இழப்பை ஏற்க முடியாமல் விஜய் ஆண்டனி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பயில்வான் ரங்கநாதன் துளியும் இரக்கமின்றி வார்த்தைகளால் தாக்கியுள்ளார் அவர் கூறியதாவது;
“விஜய் ஆண்டனி தன்னுடைய படங்களுக்கு எமன், சைத்தான், காளி, திமிரு பிடிச்சவன் போன்று நெகட்டிவ் டைட்டில்களே வைப்பதால் தான், அவருடைய வாழ்க்கையிலும் நெகட்டிவ் விஷயங்கள் நடக்கின்றன. அதனால் தான் விபத்தில் சிக்கினார். தற்போது மகளும் இறந்து விட்டார்.” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, மீண்டும் விஜய் ஆண்டனி பற்றிப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, நடிகர் விஜய் ஆண்டனியே, தன் மகளின் இறப்பு குறித்து “என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்” என சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிய பதிவிடும் போது, சினிமா பிரபலங்களின் மரணத்தை கேமராக்கள் படம்பிடிக்க கூடாது என்று சொல்வதற்கு தயாரிப்பாளர்களுக்கு என்ன தகுதி இருக்கு? என்று தயாரிப்பாளர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணி அவர்கள் காலமானார். அப்போது, கேமராக்கள் வரவேண்டாம் என்று நடிகர் அஜித் கோரிக்கை விடுக்கவே, ஊடகங்களும் கேமராக்களில் படம் பிடிக்கவில்லை. அப்படி இருக்கையில், நடிகர் விஜய் ஆண்டனியும் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால், அவரே கேமராக்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், மற்ற திரையுலக பிரபலங்கள் ஏன் கொந்தளிக்கிரீர்கள் என்று கேட்டுள்ளார். அவரது இத்தகைய பேச்சு வழக்கம் போல பூதாகரமாக வெடித்துள்ளது.