நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை பேஸ்புக் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பகிர்ந்திருந்தார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். மேலும் பத்திரிகையாளர்கள் குறித்த ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை உடனே அகற்றி விட்டேன். அதுக்காக நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன். இந்த பதிவை அமெரிக்காவில் உள்ள திருமலை சடகோபன் வெளியிட்டிருந்தார். அந்த பதிவைத்தான் மறுபதிவு செய்தேன். அதனால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் அறிவித்திருந்தனர். மேலும் அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆனால் இதனை எதிர்த்து எஸ்.வி.சேகர் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகர் தரப்பில் வழக்கறிஞர் நாகமுத்து ஆஜரானார். அப்போது வாதத்தை முன்வைத்த அவர், “எஸ்.வி.சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தபோது தவறுதலாக அவரது கை விரல்கள் send பட்டனை அழுத்திவிட்டன.
அதனால் அந்தச் செய்தி ஃபார்வர்டு ஆகிவிட்டது “ என கூறினார். அதற்கு நீதிபதிகள், “கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருப்பவர் ஏன் சமூக ஊடகங்களில் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர் வழக்கறிஞர் நாகமுத்து, சமூக வலைதளங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டன அதை தவிர்ப்பது கடினம் என்று பதிலளித்தார்.
அதற்கு நீதிபதிகள், “சமூக வலைதளங்கள் மிகவும் அவசியம் என நாங்கள் கருதவில்லை. சமூக ஊடகங்களில் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம். எஸ்.வி.சேகருக்கு என்ன வயது? “என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அவருக்கு 72 வயதாகிறது என வழக்கறிஞர் நாகமுத்து தெரிவித்தார். அப்போது, “இந்த வயதில் அவர் இதை எல்லாம் ஏன் செய்கிறாரா? அவர் ஏன் சமூக ஊடக செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?
மனுதாரர் படிச்சவர், சமூகத்தில் பிரபலமானவர். எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதுபோன்ற நபர்கள் இதுபோல பதிவை வெளியிட்டால், அது நமது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் பதிவு வெளியிடுவதிலும், மனுதாரரை போன்ற பிரபலமான நபர்கள் வெளியிடுவதிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது..
அதனால், யாராக இருந்தாலும் சரி, இதுபோன்ற ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். எனவே, எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது.” என மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறினர்.
மேலும், “இவர் மீது பல்வேறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் சென்னையில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உடனே மாற்ற வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினர்.