நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது திரைக்கு வர தயார் நிலையில் இருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படம் மிக பெரிய சர்ச்சையில் சிக்கியது, இந்த படம் வட மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் வன்னிய சமூகத்தை இழிவு செய்வது போன்று காட்சிகள் அமைந்துள்ளதாக அந்த சமூக மக்கள் மத்தியில் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், இதில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவை மிக தீவிரமாக களம் இறங்கி கண்டனத்தை பதிவு செய்தனர், ஆனால் சூர்யா தன் மீது எந்த ஒரு தவறும் இல்லாதது போன்று தொடர்ந்து தனது செயலை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார், இது அந்த சமூக மக்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் வெளியாகட்டும் தாங்கள் யார் என்று காட்டுகிறோம் என காத்திருக்கின்றனர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் மற்றும் பாமகவினர்.
இந்நிலையில் காவேரி பிரச்சனையில் நடிகர் சத்யராஜ் கர்நாடக மக்களை கடுமையாக பேசியதாக சுமார் 9 ஆண்டுகளுக்கு பின், அவர் நடித்த பாகுபலி 2 படத்துக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு போராட்டத்தில் குதித்தனர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனால் கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், காவேரி விவகாரத்தில், நான் பேசிய போது நான் கூறிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 ஆண்டுகளாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி 1’ உட்பட நான் நடித்த சுமார் 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகி உள்ளன. எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை. 9 வருடங்களுக்கு முன்னால் நான் அந்தக் கண்டனக் கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்கள் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த வார்த்தைகளுக்கக 9 வருடங்களுக்குப் பிறகு கன்னட மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால், பாகுபலி-2 படத்துக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறப்பட்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அந்த படம் கர்நாடகாவில் வெளியானது.
இந்நிலையில் இதே போன்று சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்துக்கு வட மாவட்டங்களில் வன்னிய சமூகத்தினர் மற்றும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் கர்நாடக மக்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது போன்று நடிகர் சூர்யாவும் வன்னிய சமூக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.