சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெய்பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றி பெற்றது, அதே வேலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது, இதனால் பட குழு மற்றும் நடிகர் சூர்யா ஆகியோருக்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களும் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. அந்த அளவுக்கு ஜெய்பிம் படம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
நடிகர் சூர்யாவை தாக்கினால் பரிசு வழங்கப்படும் என பாமக நிர்வாகி ஒருவர் அறிவிக்க நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டது. நான்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது, என மறைந்த வன்னியர் சங்கம் தலைவர் காடுவெட்டி குரு மகன் அனலரசன் பகிரகமாக எச்சரிக்கை விடுக்க மேலும் ஜெய்பீம் விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அன்புமணி சூர்யாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
பதிலுக்கு சூர்யா தாங்கள் பக்கம் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை விளக்கம் கொடுக்கும் வகையில் பதில் அறிக்கை விட்டார், இந்த நிலையில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசிவரை வருத்தம் கூட தெரிவிக்காமல் ஜெய்பீம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார், மேலும் ஜெய்பீம் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த சினிமா மற்றும் அரசியல் பிரபலன்களுக்கு தனி தனியாக நன்றி தெரிவித்தார் சூர்யா.
இந்நிலையில் மார்ச் 10ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் வெளிவர இருக்கையில், அந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் மத்தியில் நடிகர் சூர்யா பேசியதாவது, ஜெய்பீம் படத்திற்கு கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி, நல்ல எண்ணத்துடன் தான் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டது, ஜெய்பீம் படத்தில் சிலருக்கு சின்ன சின்ன சங்கடம் வந்தது, அது ஒரு தற்காலிகமான சங்கடம் தான். ஒருவர் ஒருவர் மனதை புரிந்து கொண்டுள்ளோம் என்பதை நான் நம்புகிறேன்.
அதற்கான எல்லா முயற்சிகளும் எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் எடுத்தோம், அந்த நேரத்தில் சில இடங்களில் சில ரசிகர் மன்றங்களில் என்னுடைய தம்பிகளுக்கு அதிக நெருக்கடிகள் வந்தது. அதை எவ்வளவு பக்குவமான மனதுடன் நீங்கள் எதிர் கொண்டீர்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த வயதில் அதை பக்குவமாக நீங்கள் எதிர் கொண்டதற்கு தலைவணங்குகிறேன்.
அதனால்தான் சொல்கின்றேன் நீங்கள்தான் எதற்கும் துணிந்தவர்கள். மாற்றத்திற்கு தயாராகுங்கள், யாருமே சாதாரண ஆட்கள் கிடையாது என சூர்யா தனது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையிலும், தனது ரசிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது குறிப்பிடதக்கது.