பொங்கல் திருநாளை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படமும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் பொங்கல் தீபாவளி என்றால் விஜய் அஜித் படங்கள் தான் மோதிக் கொள்ளும். ஆனால் இந்த பொங்கலுக்கு தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் மோதிக் கொள்கின்றன. இது தனுஷ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கேப்டன் மில்லர் படம் பற்றி எந்த விமர்சனங்களும் வெளிவரவில்லை. இப்படியான நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அயலா படம் எப்படி இருக்கிறது ஒரு கண்ணோட்டம் இங்கே பார்க்கலாம் …இன்று நேற்று நாளை படத்தின் ஆர் ரவிக்குமார் இயக்கிய அயலான் படம் நீண்ட கால இழுபறிக்கப் பிறகு பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், பானுப்பிரியா, சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஏலியனும் ஹீரோவும் நடனமாட, அத்துடன் யோகி பாபு கருணாகரன் காம்போ காமெடியில் கலக்க படம் முழுவதும் கலகலப்பாக பெரியவர்களையும் குட்டீஸ்களையும் ரசிக்க வைத்துள்ளது.
இந்த படத்தின் கதையில் வழக்கம்போல, பேராசை பிடித்த கார்ப்பரேட் வில்லன் தனது லாபத்திற்காக பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றான். ஒரு கட்டத்திற்கு மேல் மிகப்பெரிய பிளானை போடும் வில்லன், ஒட்டு மொத்தமாக பூமியின் வளங்களை அழிக்க திட்டமிடுகிறான். இது எல்லாத்தையும் வேற்று கிரகத்திலிருந்து பார்க்கும் ஏலியன் பூமியை காப்பாற்றும் நோக்கில் பூமிக்கு வந்து விடுகிறது.
மேலும் வில்லனிடமிருந்து பூமியை காப்பாற்ற முயற்சிக்கும்போது அவனிடம் மாட்டிக்கொள்கிறது. ஏலியனை பிடித்த வில்லன் அதை வைத்து ஆராய்ச்சி செய்கிறேன் என்ற பெயரில் மிகவும் சித்திரவதை செய்கிறான் . பூமிக்கு நல்லது நினைக்கும் அந்த ஏலியனை சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார், சிவகார்த்திகேயனும் ஏலியனும் எப்படி வில்லனை சமாளிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
வில்லனின் சதி திட்டங்களால் வெகு விரைவில் பூமி அழிய கூடும் என்பதை அறிந்து ஏலியன் பூமிக்கு வருகிறது என்பதில் கதை தொடங்குகிறது. வந்த இடத்தில் ஹீரோவை சந்திக்கிறது. ஹீரோ புவியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் மனம் படைத்தவராக இருக்கிறார். வழக்கம்போல சிவகார்த்திகேயன் காதலிப்பதாக சொல்லி ஹீரோயின் பின்னாடி அலைகிறார், அதுமட்டுமில்லாமல் தனது காதலுக்கு ஏலியனை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
அவ்வப்போது வரும் யோகி பாபு கருணாகரன் ஆகியோரின் காமெடி காட்சிகள் சிரிக்க வைத்து விட்டு செல்கின்றன.ஏலியன் பூமிக்கு வந்தாச்சு, ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோ கொடுத்தாச்சு என்று நகர்ந்து செல்லும் திரைக்கதை அடுத்த கட்டமாக முக்கிய கதைக்குள் செல்கிறது. படத்தின் கதை ஆகா ஓகோன்னு சொல்லும்படி இல்லை என்றாலும், இயக்குனரின் ஸ்க்ரீன் பிளே மேக்கிங் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்கிறது.
படத்தில் சிஜி காட்சிகள் அற்புதமாக உள்ளன. மேலும் ஏலியனுக்கு சித்தார்த்தின் குரல் கச்சிதமாக பொருந்தி உள்ளது. அம்மா கேரக்டரில் பானுப்ரியா அவரது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் Vfx காட்சிகள், ஆப்ஷன் காட்சிகள் காமெடி காட்சிகள் என அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை சரியாக ஸ்கோர் செய்யவில்லை.இன்னும் பெட்டரா மியூசிக் போட்டு இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது.
அத்துடன் படத்தின் கதை ஹாலிவுட் படத்தில் தோன்றும் வழக்கமான டெம்ப்ளேட் பாணியில் இருப்பதால் படத்தின் கதையை எளிதில் யூகிக்க முடிகிறது. இருப்பினும் பொங்கலுக்கு குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கக்கூடிய படமாக தான் அயலான் இருக்கிறது.