வேற லெவல் …. வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கிறது… சுடசுட திரை விமர்சனம்…

0
Follow on Google News

வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ராமசாமி (சந்தானம்) தனது குடும்ப வறுமையால் சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். பானை தொழில் செய்யும் ராமசாமியாக சந்தானம் அருமையாக நடித்திருக்கிறார். மேலும் கிராம மக்கள் அனைவரும் காட்டேரி என்று பயந்து கொண்டிருக்கும் ஒருவர் எதிர்பாராத தருணத்தில் சந்தானத்தின் பானையால் வீழ்த்தப்படுவதால், ஒட்டுமொத்த ஊரே ஒன்று கூடி அந்தப் பானையை அம்மனாக வழிபட தொடங்குகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் ராமசாமி, அந்தப் பானைக்கு ஒரு சிறிய கோவிலை கட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.அதை அடுத்து ராமசாமியின் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் அந்த ஊர் தாசில்தாரருக்கும் ராமசாமிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதனால் கோவிலுக்கு சீல் வைக்கப்படுகிறது. அதன் பிறகு, கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா .. ராமசாமி கோவில் பிரச்சனையை தீர்க்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதை காமெடி காட்சிகளுடன் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

ஆக்ஷன் காட்சிகள், அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் என மற்ற ஹீரோக்களின் படத்தை போல் இல்லாமல், சந்தானத்தின் படத்திற்கு போனால் வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அந்த வகையில், சந்தானம் நடிப்பில் வெளியான A1, தில்லுக்கு துட்டு, DD ரிட்டன்ஸ் போன்ற படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்கவில்லை என்றே கூறலாம்.தற்போது இந்த படங்களில் வரிசையில் வடக்குப்பட்டி ராமசாமியும் சேர்ந்து விட்டது.

படத்தின் முதல் பாதி முழுவதும் அடுத்தடுத்து காமெடி காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் இடைவிடாது சிரித்து அனுபவிக்கலாம். படத்தில் லொள்ளு சபா டீம், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் வரும் காட்சிகள் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. படம் முழுக்க சந்தானம் மட்டுமின்றி மற்ற காமெடி நடிகர்களும் கலகலப்பாக சிரிக்க வைக்க தவறவில்லை. நடிகை மேகா ஆகாஷ் தனக்கான கதாபாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொதுவாக காமெடி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள் திரைக்கதையில் சொதப்பி விடுவார்கள். ஆனால் வடக்குப்பட்டி ராமசாமி ஓரளவு சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதையுடன், பல இடங்களில் கலகலவென சிரிக்க உறுதியளிக்கிறது. எப்படிப்பட்ட படங்களையும் கடுமையாக ரோஸ்ட் செய்யும் ப்ளூ சட்டை மாறனே “இயக்குநர் கார்த்திக் யோகி இரண்டாம் பாகத்தில் கடைசி வரை கலக்கலான காமெடி காட்சிகளை வைத்து கரை சேர்த்து விட்டார்” என்று பாசிட்டிவான ரிவ்யூ கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன் ..இந்த வாரம் வடக்குப்பட்டி ராமசாமி தியேட்டர்களில் சட்டை போடு போடும் என்பதில் சந்தேகம் இல்லை