நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘லால் சலாம்’ படத்தினை இயக்கியுள்ளார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு மகள் இயக்கியுள்ள இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினி. மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியராக ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார் ரஜினி.
இப்படத்தின் ஆடியோ லான்ச் விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் தனது தந்தை ரஜினி குறித்து ஐஸ்வர்யா பேசியுள்ளது தான் தற்போது சோஷியல் மீடியா முழுக்க தீயாய் பரவி வருகிறது. இவ்விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “இது எல்லோருக்கும் முக்கியமான மேடை. எனக்கு கேமராமேன் விஷ்ணுவை ‘3’ படத்துலேயே தெரியும். அவர்தான் இந்தப் படத்தோட கதையை எனக்குச் சொன்னார். கதைக்காக பலரை மீட் பண்ணினேன். என்னை மீட் பண்றவங்க எங்க அப்பாமேல உள்ள மரியாதைல பண்றாங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப் பிறகு ஷோ ரீல் பண்ணேன்.
முதல்ல இரண்டு தயாரிப்பு நிறுவனத்துல சொன்னேன். அதுக்குப் பிறகு இன்னொரு தயாரிப்பு நிறுவனத்துக்குப் போனேன். அவங்க இது சின்ன பட்ஜெட் படமா இருக்கு. ரூ.40 கோடிக்கு பட்ஜெட் போட்டு எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க. அப்புறம் அப்பா இந்த ஷோ-ரீல் பார்த்தார். அதுக்குப் பிறகுதான் இந்த படத்துக்குள்ள வந்தார். அவர் என்கிட்ட இந்தக் கதாபாத்திரத்தை நான் பண்ணினா எப்படி இருக்கும்னு கேட்டார். அதன் பிறகுதான் இதெல்லாம்.
அவங்க என்னப்பா பெரிய ஆளு அவங்களுக்கு சுலபமா கிடைக்கும்னு’ நினைப்பாங்க. ஆனா, அதெல்லாம் இல்ல. மத்தவங்களுக்குக்கூட சுலபமா கிடைக்கும். நான் அப்பாவை பார்த்துகிட்டதவிட, எங்க அப்பாவை அவங்க நல்ல பார்த்துகிட்டாங்க. ரசிகர்கள் அப்பாவைப் பத்திரமா பார்த்துகிறீங்க. ரஹ்மான் சார்கூட இருந்துட்டு வெளிய வந்தா வாழ்க்கையோட தத்துவங்கள் தெரியும். அவ்ளோ குழந்தைத்தனமாக இருப்பார். என்னோட பசங்க எனக்கு கிடைச்ச பெரிய வரம். இந்தப் படத்தோட ஷூட்டிங் சமயத்துல நான் அவங்ககூட குறைவான நேரம்தான் செலவு பண்ணினேன்.
அவங்களும் அதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. பெரியவர் பொறுப்பா பேசுவார். சின்னவர் ஒரு கிரிட்டிக். பொண்ணுக்கு ஒரு கஷ்டம்னா அப்பாவாக வந்து பணம் கொடுக்கலாம். ஆனா, என் அப்பா படம் கொடுத்திருக்கார். வாழ்க்கை கொடுத்திருக்கார். எப்பவும் எனக்கு அவர்தான் முதன்மை. இந்தப் படம் பேசுற தத்துவங்களுக்குதான் அப்பா வந்தாங்க.” என்று பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “எங்க குழு சோசியல் மீடியா பதிவுகளை காமிப்பாங்க. அதுல என் காதுல அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. அவர் சங்கி இல்ல. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கு அது புரியும்.
இதுக்கு பிறகு இந்த படம் உங்க லிஸ்ட்ல இருக்கும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்குமட்டும் தான் இருக்கு. நான் கர்வமாகச் சொல்றேன். யாரும் அதை பண்ணமாட்டாங்க. நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க.” என கூறியுள்ளார்