மாணவர்களுக்கு நடந்த கொடுமை…. மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்

0
Follow on Google News

நடன இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸுக்கு அவர் நடித்த பல படங்கள் ஓடாத நிலையில், பேய் காமெடி படமான முனி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து காஞ்சனா படத்தில் நடித்த அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை காஞ்சனா சீரிஸ் படங்கள் கொடுத்தன.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படங்களை தாண்டி அவர் மற்ற இயக்குநர்களுடன் இணைந்து நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 27 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் படங்களில் அதிக தொகைக்கு கொடுத்து வாங்கப்பட்ட படமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ படத்தில் பத்து பாடல்கள் இடம்பெறும், இந்த ஆல்பம் ஆகஸ்ட் 24 அன்று சென்னையில் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவை காண ஆர்வமுடன் வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பவுன்சர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, அந்த மாணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மாணவர் படக்குழுவுக்கான நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றதாகவும் அதனால் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்விற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சந்திரமுகி 2′ இசை வெளியீட்டு விழாவில், பவுன்சர்கள், கல்லூரி மாணவர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுக்குறித்து எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.

இந்த சம்பவம் ஆரங்க்குக்கு வெளியே நடந்த காரணத்தால் நானோ, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. நான் எந்தளவுக்கு மாணவர்களை நேசிக்கிறேன் என்பதும், அவர்கள் வளர வேண்டும் என நான் நினைப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுபோன்ற சண்டைகளுக்கு எதிரானவன் நான். நான் எப்போதும் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எந்த காரணமாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறான விஷயம். அதிலும் மாணவர் ஒருவருக்கு இது நடந்திருக்க கூடாது. இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இது போன்ற செயல்களில் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.