பிரகாஷ் ராஜுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள்.. மாட்டு சாணத்தால் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பன்மொழி திரைப்படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, தற்போது இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பாஜக விற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதால் அடிக்கடியில் சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதுண்டு. கடந்த ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்திய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், “என்னை அனுமதித்திருந்தால் இரு அரசாங்கங்களின் அறிக்கை அட்டையிலும் “மைனஸ்” கொடுத்திருப்பேன் ,

இருப்பினும், மைனஸ் அனுமதிக்கப்படாததால், பூஜ்ஜிய மதிப்பெண் கொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த விமர்சனத்திற்கு பாஜக தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்துடன் மட்டும் அவர் ஓய்ந்து விடவில்லை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜக வை விமர்சனங்களால் தாக்கித்தான் வருகிறார்.

அவ்வாறுதான் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கர்நாடக மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைவர் முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மைக்கு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது, “கிச்சா சுதீப்பின் அறிக்கையால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் பாஜக அரசாங்கத்தை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தான், கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் சென்றுள்ளார். கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் சிறப்புரை ஆற்றியதும் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது, கல்லூரி மாணவர்கள் தயாராக வைத்திருந்த மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தை அவர் நின்று சிறப்புரை ஆற்றிய இடம் மற்றும் அவரது காலடி பட்ட அனைத்து இடங்களிலும் தெளித்து சுத்தம் செய்துள்ளனர்.

மாணவர்கள் செய்த இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், பல தரப்பினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வரும் நிலையில்தான், கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜ் வருவதற்கு முன்னரே கடும் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி அருகே போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன் பிரகாஷ்ராஜ் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். இறுதியாக, பிரகாஷ் ராஜ் அங்கிருந்து கிளம்பியதும் மாணவர்களில் ஒரு தரப்பினர் இவ்வாறு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் சோஷியல் மீடியாவில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல அடிக்கடி பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோமியம் கொண்டு சுத்தம் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி பெரும் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.