தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற பாடலுக்கு ஏற்ப, பெஸ்ட் தந்தையாக இருக்கும் நெப்போலியன், தனது மகனுக்காக செய்த காரியம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நெப்போலியன், அரசியலிலும் ஈடுபட்டு, மத்திய அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், நான்கு வயதில் இருக்கும் போதே மற்ற குழந்தைகள் போல் இல்லை, இவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெப்போலியன், அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியிருக்கிறார்.
அப்போதுதான் மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று அப்போதே டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தன்னால் முடிந்த அளவிற்கு ஆங்கில மருத்துவத்தில் தன்னுடைய மகனின் உடல் நிலையை சரி செய்து விடலாம் என்று எண்ணி, அதற்காக போராடிய நெப்போலியனுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது.
அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் இதை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே தன்னுடைய மகனை அங்கே கூப்பிட்டு சென்று சிகிச்சை எடுத்த பிறகு படிப்படியாக தனுஷ் குணமடைந்திருக்கிறார். ஆனாலும் பெரிய அளவில் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை என்றாலும், இந்த நோய் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளை விடவும் தனுஷ், அவர் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் தன்னுடைய வேலைகளை தானே செய்ய தொடங்கி இருக்கிறார்.
அதற்குப் பிறகு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல இனி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதற்காக ஒரு மருத்துவமனையையும் கட்டி கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் எதிர்காலத்திற்காக இந்தியாவை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடும்பத்தோடு குடிபெயர்ந்த நெப்போலியன் அங்கு பிசினஸ் செய்து வருகிறார். மேலும் விவசாயம் செய்தும் கலக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து தான், தன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனுஷ்கான சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்து, நிச்சயம் செய்து முடித்துள்ளார். நெப்போலியன் மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு இப்போது திருநெல்வேயில் இருக்கும் அக்சயா என்ற பெண்ணுடன் வீடியோ காலில் நிச்சயம் நடந்துள்ளது.
உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன், தன் குடும்பத்தோடு இந்தியா வந்து நிச்சயத்தை முடித்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய இருக்கிறார்.
அந்த வீடியோவை தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இப்படி சிறுவயதிலிருந்தே தன் மகனுக்கான எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்த நெப்போலியன், இன்று அவருக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதற்கும், நீங்கள் தான் சிறந்த தந்தை என பலரும் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ந்து வருகின்றனர்.