சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை, குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.
மன்சூர் அலிகானின் கருத்துக்கு பதிலளித்த திரிஷா, “என் தொடர்பாக மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பேச்சு தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து மன்சூர் அலிகான் கூறியிருப்பது, நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். மக்களுக்கு நான் யார் என்று நன்றாகவே தெரியும்.
பாஜகவை சேர்ந்த எஸ்வி சேகர் பெண்களைப் பற்றி ரொம்ப தவறாக பேசினார். அது தொடர்பாக அவர் மீது எந்த ஒரு கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருந்தபோது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை. மேலும், நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இந்த விவகாரம் பற்றி எதுவுமே தெரியாது. நடிகை திரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை. திரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். அதேபோல ஏற்கனவே நான் திரிஷா மீது தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. அப்படி என்னால் பேச முடியாது. நான் என்னுடைய படத்தை இன்னும் பத்து நாட்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறேன். அதேபோல பிரபல அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலிலும் ஈடுபட இருக்கிறேன். இதனால் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்கு யாரோ சிலர் திட்டமிட்டு நான் தவறாக பேசியது போல சித்தரித்து எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, கதாயநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்துதான் பேசினேன். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் கேள்வி எதையும் நடிகர் சங்கம் கேட்கவில்லை. போனிலும் பேசவில்லை. நோட்டீஸ் அனுப்பி இந்த மாதிரி விளக்கம் கொடுங்க என்று கேட்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன.. நிஜமாகவா ரேப் செய்கிறார்கள்?.. சினிமாவில் கொலை செய்கிறார்கள் என்றால் நிஜமாகவா கொலை செய்கிறார்கள்.? சினிமாவில் ரேப் என்றால் நிஜமாக செய்வதா? அறிவு இருக்கிறதா? நான் கலைஞர்களை இழுக்காக பேசுகிறவன் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவன். திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். த்ரிஷா குறித்து நான் தவறாகவே பேசவில்லை
இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நான் தப்பா பேசி இருந்தால் தானே மன்னிப்பு கேட்கணும். நான் என்ன மன்னிப்பு கேட்கிற ஜாதியா, என தெளிவாக கூறியுள்ளார். இந்த நிலையில் மன்னிப்பு கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைக்கும்படி மன்சூர் அலிகானுக்கு பாரதி ராஜா அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டத்தில் அனைவரிடமும் கலந்தாலோசித்து, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.