ரஞ்சித் இயக்கிய அந்த படம் சாதி படமாக தெரியவில்லை… ஒரே போடாக போட்ட கார்த்திக்..

0
Follow on Google News

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது நீங்க எதுக்கு ஜாதி படத்துல நடிச்சீங்க என்று செய்தியாளர் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் கார்த்தி அளித்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 2004 ஆம் ஆண்டு பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்தி வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தீரம் அதிகாரம் ஒன்று, கைதி என அத்துனை படங்களும் வரிசையாக ஹிட் அடித்துள்ளது. வெவ்வேறு இயக்குனர்களின் கூட்டணியில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு டிராக்கை அமைத்து உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய ஜப்பான் படத்தில் நடித்துள்ளார்.

இது கார்த்தியின் 25வது படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, இப் படத்தின் செய்தியாளர் சந்திப்பும் சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கார்த்தி உட்பட ஜப்பான் படத்தின் படக்குழுவினர் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், செய்தியாளர் ஒருவர், நீங்க ஏன் சாதி படத்துல நடிச்சீங்க? காரணம் என்ன? என்று கார்த்தியிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த கார்த்தி, “எனக்கு ஒரே மாதிரி படங்களை பண்ணுவதற்கு சலிப்பாக இருக்கிறது.

அதனால் தான் வேறு வேறு பாணியில் படங்களில் நடிக்கிறேன். அதே போல் நான் மெட்ராஸில் வளர்ந்தவன். எனக்கு ஜாதி எல்லாம் தெரியாது. அப்படி வளர்ந்தவன் நான். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்கு ஜாதி எல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் கேட்போம். அவ்வளவுதான் அதை தாண்டி ஜாதி பற்றி எல்லாம் பேசிக் கொள்ள மாட்டோம்.

மெட்ராஸ் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் ஒரு சுவரை வைத்து பேசப்பட்ட அரசியல் மற்றும் அதை வைத்து உருவாக்கப்பட்ட கதை பிடித்திருந்தது. அருமையான கதையாக இருந்ததால் மெட்ராஸ் படத்தில் நடித்தேன். மெட்ராஸ் எனக்கு ஜாதி படமாக தெரியவில்லை” என்று பளிச் என்று விளக்கமளித்துள்ளார். கார்த்தியின் இந்த தெளிவான பேச்சு, இணையத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.