1997-ம் ஆண்டு சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழா இங்கிலாந்து எலிசபெத் மகாராணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
1750களில், இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரி வசூல் உரிமையை பெற்றது; அப்போது கான்சாகிப் யூசுப்கான் என்ற மருதநாயகம், வாழ்நாளின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வீரம் செறிந்த யுத்தம் நடத்தி வீரச்சாவடைந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்படாத மருதநாயகத்தின் வாழ்க்கையைத்தான் கமல்ஹாசன் 1997ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ80 கோடியில் திரைப்படமாக்க திட்டமிட்டு படத் தொடக்க விழாவை நடத்தினார்.
அப்போதே மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது. மேலும் படத்தின் படப்பிடிப்புகளையும் கமல் தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த படத்தை எடுப்பதற்காக மற்ற படங்களில் கமல் சம்பளமாக வாங்கிய பணத்தை எல்லாம் இந்த படத்தில் தான் போட்டு அப்போதே கமல் பல கோடிகளை மருதநாயகம் படத்திற்காக செலவு செய்து இருந்தார்.
மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் சுமார் 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்த இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது. இந்த செய்தியின் காரணமாக, உலகம் முழுவதும் மிக பெரிய கவனத்தை பெற்றது. இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகுந்த கனவுடன் தொடக்கிய மருதநாயகம் படத்தை பாதியிலே கைவிட்டார் கமல்ஹாசன்.
ஆனால், தன்னுடைய கனவு படமான மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்கி அதை திரையில் வெளியிட வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் கமல்ஹாசன். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துடன் இணைந்து மருதநாயகம் படத்தை மீண்டும் எடுப்பது குறித்து அந்த நிறுவனத்துடன் கமல்ஹாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது, மேலும் சோனி மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள மருதநாயகம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இந்த படம் அதன் பின்பு அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை.
இடையில் கமலஹாசன் ஏற்கனவே மருதநாயகம் படத்தில் நடித்த தோற்றம் தற்பொழுது மாறிவிட்டது, அதனால் மீண்டும் அந்த படத்தை கமலஹாசன் நடிப்பதாக இருந்தால், மீண்டும் முதலில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்கிற பிரச்சனை எழுந்தது, ஆனால் மருதநாயகன் படத்தில் கமல்ஹாசன் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள 30 நிமிட காட்சிகள் தான் அந்த படத்தின் கடினமான பகுதி என்றும், அதன் பின்பு படத்தின் கதை அடுத்து 12 ஆண்டுகளுக்கு பின்பு என்று தொடங்கும் என்பதால் கமல்ஹாசன் தோற்றம் ஒரு பிரச்சனைகையாக இருக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று, வீழ்ந்து கிடந்த கமல்ஹாசன் மார்க்கெட் மிக பெரிய உச்சத்துக்கு சென்றுள்ளது. மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெற்று பெரும் லாபத்தை பெற்று தந்துள்ளது, இந்த சூழலில் தன்னுடைய கனவு படமான மருதநாயகன் படத்தை தூசி தட்டியுள்ள கமல்ஹாசன், அதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
அடுத்த மாதம் அமெரிக்க செல்ல இருக்கும் கமல்ஹாசன், பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவங்களை சந்தித்து, மருதநாயகம் படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், மேலும் இந்த படம் ஹாலிவுட் தரத்துடன் எடுக்கப்பட இருப்பதால், ஒரு ஹாலிவுட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உள்ளே வரும் பொழுது அந்த படத்தின் விளம்பரம் ஹாலிவுட் சினிமாவில் மிக பெரிய பங்கு வகிக்கும் என்பதால் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த மாதம் கமல்ஹாசன் அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.