நடிகர் ஜெயம் ரவி. சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே கல்லூரியில் படித்த காலத்திலேயே ஆர்த்தியை காதலித்து வந்த நிலையில் 2010ம் ஆண்டில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தியை கடந்த ஆண்டிலேயே பிரிந்து வீட்டை விட்டு ஜெயம் ரவி வெளியேறியது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஜெயம் ரவி, சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக பங்கேற்றதுதான் பெரிய பஞ்சாயத்தை கிளப்பியது. அதுவும் ஒரே மாதிரியான பட்டாடையில் புதுமணத் தம்பதி போல அவர்கள் காணப்பட்டது பார்த்தவர்களை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை பார்த்த அவரது மனைவி ஆர்த்தி 2 பிள்ளைகளுக்கு பொறுப்புள்ள தகப்பன் செய்கிற வேலையா இது என்று அறிக்கை வெளியிட்டு தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக ஜெயம் ரவியும் 2 தினங்களுக்கு முன்பு, தனது மனைவி ஆர்த்தி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார். என்னை பொன் முட்டையிடும் பறவையாக ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திக் கொண்டனர். என் பெற்றோருடன் உறவாட கூட என்னை அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கெனிஷாதான் இனி என் வாழ்க்கை துணை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆர்த்தியின் தாயார், அதாவது ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் சினிமா தயாரிப்பாளராக நான் மாறியதே மாப்பிள்ளை ஜெயம் ரவி சொன்னதால்தான். அவர் நடித்த படங்களை தயாரிக்க 100 கோடி ரூபாய் வரை நான் கடன்பட்டேன் என்று கூறியிருந்தார். என் மகள் வாழாவெட்டியாக வாழ்வதை என்னால் பார்க்க முடியாது என்றும் வருத்தப்பட்டு கூறி இருந்தார். இப்படி ஆர்த்தி ஜெயம் ரவி அவரது மாமியார் என மாறி மாறி அறிக்கை போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஊர் உலகம் என்ன பேசினால் என்ன என்பது போல் எதையும் கண்டுகொள்ளாத ஜெயம் ரவி கெனிஷா ஜோடி, ஜாலியாக தங்களது நாட்களை கழித்து வருகிறது. இது ஒரு விதத்தில் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாக ஒரு தரப்பினர் விமர்சித்தாலும் மற்றொரு தரப்பினர், சினிமா நட்சத்திர தம்பதிகளுக்குள் மிக விரைவில் ஏற்படும் ஈகோ பிரச்னை அவர்களை நிரந்தரமாக பிரித்து விடுவது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான் என்றும் கூறுகின்றனர்.
இதில் இப்போது அதிகமாக விமர்சனத்தில் சிக்கி வருவது பாடகியும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ்தான். ஆர்த்தியின் கணவர் ஜெயம் ரவியை கெனிஷா தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபகரித்து விட்டார். ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டார் என பலரும் வசைபாடுகின்றனர். ஆனால் தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என் பணி காதல் செய்து கிடப்பதே என்ற பாணியில் நெத்தியடியாக ஒரு பதிவை இப்போது செய்திருக்கிறார் கெனிஷா.
ஆளாளுக்கு அறிக்கை வெளியிட்டு மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வரும் இந்த சூழலில் இப்போது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கெனிஷாவும் தன் பங்குக்கு ஒரு பதிவை செய்து எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறார். தனது வலைதள பக்கத்தில் அவர் செய்துள்ள ஒரு பதிவில், எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது. என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது. என்மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது.
நான் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன். நான் இசையை பற்றிக்கொள்ள விரும்புகிறேன். தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன். நாளைய விடியல்கள் என்னும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களில் இருந்து என் ஆன்மா பாடுகிறது என கூறி இருக்கிறார். அதாவது என் மீது எந்தவிதமான விமர்சனங்களை நீங்கள் வைத்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்துவிடுவேன். நீங்கள் வீசும் கற்கள் என்னை காயப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இது இன்னும் இந்த விவகாரத்தை விஸ்வரூபம் செய்திருக்கிறது.