சம்பாரிச்ச மொத்த பணத்தையும் அள்ளி கொடுக்கும் பாலா… முன்னணி நடிகர்களுக்கு விழுந்த சவுக்கடி…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார்.

இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வழங்கினார்.

இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை வழங்கினார். மேலும், இதேபோல், மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் பணியை தொடரவுள்ளதாக நடிகர் பாலா தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளகனை மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, நடிகர் பாலா ரூ.5 லட்சம் மதிப்பில்,இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மற்றும் 125 விவசாய குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா சோளகனை மலைக்கிராமத்தில் நடந்தது. விழாவிற்கு நடிகர் பாலா தலைமை வகித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகளாவிய தமிழர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்தீங்க. அதற்கு நன்றி. அதையெல்லாம் பார்க்கும் போது தான் இன்னும் ஓடணும், நிறைய செய்ய வேண்டும் என தோனுது. அப்படி செஞ்சது இந்த 3வது ஆம்புலன்ஸ். முதல் ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் பெரியோர்களுக்கு கொடுத்தோம். இரண்டாவது ஈரோடு குன்றி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொடுத்தோம்.” என்றார்.

மேலும், “இந்த சோளகர் ஊரில் ரோடு வசதியே இல்லை. அதனால் ஆம்புலன்ஸ் கொடுத்தது, ரொம்ப உதவியா இருக்குன்னு அந்த மக்கள் சொன்னாங்க. ஆங்கரிங் பண்ணி, அதுல வந்த பணத்தில் தான் இந்த ஆம்புலன்ஸ் வாங்கினேன். மேலும் அந்த பகுதியில் கீழே உள்ள தாமரைக்கரை என்ற ஊரிலும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்தேன். யார்கிட்டயும் 1 ருபாய் வாங்காமல் உதவி பண்ணனும்ங்குறது தான் நம்முடைய பாலிசி.

உயிரை காப்பாத்துறதுக்கும் பொருள் வாங்கி கொடுத்துட்டேன். பயிரை காப்பாத்துறதுக்கும் பொருளை வாங்கி கொடுத்துட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கு இது எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.” என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களுக்கு, இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என கோரிக்கை வந்தது. அந்த கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்ற போகிறேன் என்று கூறியுள்ளார்.

பாலாவின் இந்த நல்ல உள்ளத்தை பார்த்து பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மிக குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர் பாலா உதவி செய்வதற்காவே தான் உழைத்த மொத்த பணத்தையும் செலவு செய்கிறார், ஆனால் 100 கோடி 200 கோடி வாங்கும் நடிகர்கள், ஒரு சிறிய தொகையை இது போன்று உதவி செய்வதர்களா என்று அந்த நடிகர்களை விமர்சனம் செய்வதை விட, கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு விசில் அடிக்கும் ரசிகர்கள் தான் திருந்த வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.