இசையமைப்பாளர் தேவா என்றாலே நமது நினைவுக்கு வருவது கானா பாடல்கள்தான். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அழைத்துவந்ததில் பெரும் பங்கு இவரையேச் சாரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். “காத்தடிக்குது காத்தடிக்குது… காசிமேடு காத்தடிக்குது…”, “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…”, “கவலைப்படாதே சகோதாரா…” உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது.
ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, பிரசாந்த், கார்த்திக், சத்யராஜ், ஆர்.பாண்டியராஜன் படங்கள் ஆரம்ப கால அஜித், விஜய், படங்கள் பெரும்பாலானவை தேவாவின் கைவண்ணமே. 80களில் இளையராஜாவின் ராஜாங்கம் என்றால் 90களுக்கு இவரது கானம் தான். நீண்ட தூர பயணங்களில் இவரது இசையும் கூட வழித் துணை. பலரும் இதை அறிந்திருக்க மாட்டார்கள். வாலியா கண்ணதாசனா என்ற மன மயக்கத்துக்கு நிகரானது, இந்த இசை மயக்கமும். அந்த மயக்கத்தை தந்தவர் மெல்லிசை மன்னரால் தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட தேவா.
அஜித்தின் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது ஆசை படம்தான். ஆசை நாயகன் அஜித் என ரசிகர்கள் அப்போது தான் இவரை ஆசை ஆசையாக அழைக்க துவங்கினர். வசந்த் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சுபலக்ஷ்மி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆக முக்கிய காரணமே தேவா தான். அந்த அளவிற்கு இசையில் மிரட்டி இருப்பார்.
அந்த படத்தில் தேவா போட்ட ஒரு பாடலை அந்த படத்தின் இயக்குனர் நிராகரித்திருக்கிறார். இதனைப் பற்றி அப்படத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்திருந்த மாரிமுத்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. இவர் தனது வாழ்க்கையின் ஆரம்பகாலகட்டத்தில் துணை இயக்குனராக சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இதன் பின்பு படிப்படியாக முன்னேறி இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமடைந்தார்.
இது போன்ற நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சலில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு திறமைக்காக ரசிகர் கூட்டங்கள் பெருகி வருகின்றனர். தற்போது இவர் ஆசை படத்தில் பணிபுரிந்ததை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதாவது, பாட்ஷா படத்தின் “ஸ்டைலு ஸ்டைலு தான்” பாடல் முன்னதாக நடிகர் அஜித்தின் ஆசை படத்துக்காக முதலில் போடப்பட்டதாகவும், சற்று மெல்லிசையாக வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்டுக் கொண்டதால் அதற்கு மாற்றாக மீனம்மா பாடலை தேவா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். என்னதான் அந்த பாடல் அஜித்துக்காக இசையமைத்தாலும் அந்த பாடல் ரஜினிக்கு எப்போதும் செட் ஆகும் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று சலித்ததில்லை. இவை இரண்டுமே மெகா ஹிட் ஆகியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் தேவா இசையமைத்த படங்களில் ஒன்றான “அண்ணாமலை” படத்தில் வரும் பின்னணி இசை ஆச்சரியப்படும் படியாக அஜித்தின் இன்னொரு படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அண்ணாமலை படம் வெளியாகி 7 வருடங்களுக்கு பிறகு கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “உன்னை தேடி” படத்தில் வரும் சில காட்சிகளில் இதே போன்ற இசை இடம்பெற்றுள்ளது. இது யாருக்கும் தெரியாதா ஒன்றுதான். ஆனால் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் தேவாதான் இசையமைத்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கது.