சென்னை : தல என தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமார் தன்னை அப்படி அழைக்கவேண்டாம் என தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளே ஏ.கே என அழைக்க ஆரம்பித்துள்ளனர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும் வசூல்ரீதியாகவும் ஓரளவு தயாரிப்பாளருக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்திருந்தது. ஆனால் அதன் இயக்குனரான வினோத் வலிமை படத்தை மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என எதிர்பார்த்திருந்தார். வினோத் அஜித் கூட்டணியின் முந்தைய படங்களான வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை பட வெற்றிகளை விட AK 61 மாபெரும் வெற்றியை பெற்று சமீபத்திய படங்களின் ரெக்கார்டுகளை முறியடிக்கவேண்டும் என இயக்குனர் வினோத் எதிர்பார்க்கிறார்.
ஏற்கனவே வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்கவேட்டை திரைப்படங்கள் சக்கைபோடு போட்டிருந்தது. அதனால் அதே கருவை தழுவி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நூதன திருட்டுக்களை மையமாக கொண்டு ஆக்சன் த்ரில்லர் படமாக எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த படப்பிடிப்பின் எண்பது சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஹைதராபாத்திலேயே நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போனிகபூர் மற்றும் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சந்தித்ததாக கூறப்படுகிறது. கதையை பற்றி எப்படி வெளியில் தகவல்கள் சென்றது என அஜித் மிகவும் வருத்தப்பட்டதாக சினிமாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனி கதையை மாற்ற முடியாது என்பதால் மேலும் சில மாற்றங்களை வினோத் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இரண்டுமணிநேர படமாக உருவாகிவருகிறது. மேலும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என தகவல்கள் கசிந்துள்ளன. இந்த திரைப்படம் பில்லா போல அஜித்திற்கு இன்னொரு மகுடமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.