அரசு பணியை துறந்தவர் …கருணாநிதியே தேடி சென்ற நபர்….யார் இந்த இல.கனேசன்.? யாரும் அறிந்திராத தகவல்களை வெளியிட்ட பேராசிரியர்..

0
Follow on Google News

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் அறிந்திராத இல.கணேசன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய தகவல்களை தகவல்களை தனது வாழ்த்து செய்தியில் வெளியிட்டுள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன். அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, சாதாரண வருவாய் ஆய்வாளராக அரசுப் பணியில் தன் வாழ்க்கையை தொடங்கியவர் இல.கணேசன் அவர்கள்.

1970ஆம் ஆண்டு தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர் எஸ் எஸ் முழு நேர ஊழியராக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார், தொடர்ந்து 51 ஆண்டு பொது வாழ்க்கை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், 1975 முதல் 1977 வரை இரண்டு ஆண்டுகள் நெருக்கடிநிலை காலத்தில் நெருக்கடி நிலைக்கு எதிராக தென் மாவட்டங்களில் மக்களை ஒன்று திரட்டி ஜனநாயகத்தை மீட்டு கொண்டு வருவதற்காக அவர் ஆற்றிய பணி அபாரம்.

அதைத் தொடர்ந்து தென்காசி அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் முஸ்லீம் மதமாற்றம் நடந்தபோது, அந்தப் பகுதியில் ஒரு இந்து எழுச்சியை உருவாக்கி மீனாட்சிபுரம் மதம் மாற்றத்தை அகில இந்திய அளவில் பேசும் பொருள் ஆக்கியவர் இல கணேசன், ஒரு முறை முன்னாள் பிரதமரும், பாஜகவின் தலைவராகவும் இருந்த வாஜ்பாய் அவர்கள் இல கணேசன் அவர்கள் பற்றி பேசும்போது, இந்தியில் புதிய வார்த்தையை அறிமுகம் செய்து வைத்துள்ளார் இல.கணேசன் என மீனாட்சிபுரம் சம்பவத்தை சுட்டிக்காட்டி இல கணேசன் அவர்களைப் மனதார பாராட்டினார்.

அதேபோன்று 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரம் நடந்தபோது அந்தப் பகுதியில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட இந்துக்களின் பிரச்சனையை அரசாங்கத்திடம் எடுத்து சென்றவர். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் இந்துக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளை எடுத்து கூறியதில் இல கணேசன் அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த இல கணேசன் அவர்கள் தமிழகத்தில் அவர் போகாத கிராமங்களே இல்லை என்றே சொல்லலாம். 1991 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து இல.கணேசன் அவர்களை பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்ட பின் தொடர்ந்து முப்பது ஆண்டுகாலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி கொடுத்தவர் இல கணேசன் அவர்கள், அதுவரை பாரதிய ஜனதா கட்சி என்றால் ஒரு வட இந்திய கட்சி என்ற தமிழக மக்களின் மனநிலையை மாற்றி இது தமிழகத்திற்கும்மான கட்சி என்று முதல் முதலில் தோற்றத்தை உருவாக்கியவர் இல கணேசன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை அதனுடைய கருத்துக்களை, தமிழகத்தில் சுப்பிரமணியபாரதி, வள்ளுவர், ஆகியோர் கருத்து இலக்கியங்கள் உடன் இணைத்து சொல்ல கூடிய அற்புதமான ஆற்றல் வாய்ந்தவர் சிறந்த பேச்சாளர், நகைச்சுவையாக பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.அகில இந்திய தலைவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசுவதை அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்து பல சிக்கலான நுட்பமான கருத்துக்களை கூட எளிய முறையில் மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் வல்லவர்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருக்கும் அத்தனை முக்கியமான தலைவர்களின் மனம் கவர்ந்தவர், ஒரு முறை கருணாநிதி முதல்வராக இருந்த போது இல.கணேசன் அவர்கள் வீட்டுக்கே சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்றால் அவருடைய முக்கியத்துவம் என்ன என்பது நமக்குத் தெரியும். பொற்றாமரை என்கின்ற தமிழ் இலக்கிய அமைப்பை உருவாக்கி அதில் தேசியமும் தமிழும் எப்படி இணைந்து செயல்படுகிறது என பல ஆண்டுகளாக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், அறிஞர்களுக்கு பாராட்டு என்று தமிழகத்தில் தமிழ் இலக்கியத்திற்காக உருவாக்கி தமிழை தலைநிமிரச் செய்தவர் இல கணேசன்.

உலகெங்கும் இருக்கக்கூடிய பல தமிழக அமைப்புகள், தமிழ் நண்பர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். குறிப்பாக இலங்கை பிரச்சனையில் முழுமையான புரிதல் உள்ளவர், இல.கணேசன் பலமுறை இலங்கை சென்று இருக்கிறார், அதே போன்று மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருக்க கூடிய தமிழ் கூறு நல்லுலகத்தில் அனைவரிடமும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர். இல கணேசன் அவர்களை மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துளர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர், பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.