இனியும் எல்லை மீறி பேசினால் ஆ.ராசாவுக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது,உண்மை, எழுத்து, கவிதை ஆகியவற்றை கருணாநிதி நாட்டு மக்களுக்காக பயன்படுத்தவில்லை. தன் வீட்டு மக்களுக்காகத்தான் பயன்படுத்தினார். சர்காரியா கமிஷனில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.
தலைமைக்கு துணையாக இருக்கவே நாங்கள் பணியாற்றிய வருகிறோம். திமுகவில் கிளை செயலாளராக கூட இல்லாமல் உதயநிதி உயர் பதவிக்கு வந்துள்ளார். உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி விட்டு தான் திமுகவினர் கட்சி பணியை தொடங்குகிறார்கள். வாரிசு அரசியல் மூலம் கட்சியும் சொத்துக்களை கபளீகரம் செய்யும் முயற்சிக்கு திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுகவில் உட்கட்சி பூசலை மறைக்கவே அம்மாவை பற்றியும் முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசி வருகிறார்கள்.
அம்மா இல்லாத காலத்தில் அவரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மா மீது காழ்புணர்ச்சி காரணமாக பழி வாங்குவதற்காக திமுகவினர் வழக்கு தொடுத்தார்கள். ஆனால் ஆ.ராசா மீது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் புகார் தொடுக்கப்பட்டது. அதில் அவர் திகார் சிறைக்கு சென்றார். உச்சநீதிமன்றத்தில் 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளதை ஆ.ராசா ஞாபகம் கொள்ள வேண்டும். 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ள பொழுது எப்படி பொது வெளியில் விவாதிக்க முடியும். ஆ.ராசா பொது வெளியில் மிக கவனமாக பேச வேண்டும்.
எங்களுக்கும் தரம் தாழ்ந்து பேச தெரியும். ஆனால் சுயகட்டுப்பாடு, அரசியல் நாகரீகம், சபை நாகரீகம், மக்கள் பணி பொது வாழ்க்கை ஆகியவற்றை அம்மா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். ராஜா எல்லை மீறினால் மக்களே தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி விடுவார்கள். ராஜாவை நிரபராதி என்று நீதிமன்றம் விடுவிக்கவில்லை. உரிய வகையில் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றம் முன்பு வைக்க தவறிவிட்டார்கள் என்று நீதிபதி கூறியுள்ளார். இப்போதும் ராஜா மீது மேல்முறையீடு உள்ளது. அவர் தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளி. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.