மதுரை திருமங்கலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- அதிமுக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வரும் ஸ்டாலின் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்கள் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற திட்டங்களையும், அம்மா ஆட்சி திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். புரட்சித்தலைவி அம்மா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 100 சகவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று கூறினார்கள். யாருக்காவது கொடுத்தார்களா? ஆனால் அப்பாவி மக்களிடம் நிலத்தை அபகரித்தனர். அதை மீட்டுத் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்பொழுது புயலை வைத்து அரசியல் ஸ்டாலின் செய்கிறார். அவர் எதையும் மனசாட்சியுடன் பேசவேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் கன மழையால் உயிரிழந்தால் 2 லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அவர்கள் அதில் ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை. அதன்பின் அம்மா ஆட்சியின் போது 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்பொழுது முதலமைச்சர் அதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது புயல் வருவதற்கு முன்பாகவே புயலை காட்டிலும் வேகமாக செயல்பட்டு இரண்டரை லட்சம் மக்களை முகாமில் தங்க வைத்து அவர்களது உயிரை பாதுகாத்து காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார்.
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் அமைச்சர் குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அவர்கள் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தேங்கிய மழைநீரை வெளியேற்றி நிவாரண பணிகளைபோர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் மக்களிடம் நாங்கள் காணாமல் போய்விடுவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் களத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அடையாள அணிவகுப்பு நடத்த முயற்சிக்கிறார். அவர் எத்தனை அணிவகுப்பு நடத்தினாலும் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
மேலும் முதலமைச்சருக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு பெருகி வருவதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் நானும் களத்தில் தான் இருக்கிறேன் என்று கத்தி கத்தி பார்க்கிறார். ஆனால் மக்கள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை என்பது யதார்த்தமான உண்மை. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் புயல் நிவாரண பணிகளை தமிழக முதலமைச்சர் சிறப்பாக செய்திருக்கிறார் என்று பாரத பிரதமரே பாராட்டியிருக்கிறார். இந்த அற்புத சாதனையை எப்படியாவது மூடி மறைக்க வேண்டும் என்று தினந்தோறும் ஸ்டாலின் ஒரு பொய்யான அறிக்கை விடுகிறார்.
ஸ்டாலின் எத்தனை நாடகம், எத்தனை வேடம் போட்டாலும் உண்மையையும், சத்தியத்தையும் ஒருபோதும் மறைக்க முடியாது. உண்மையின் வடிவமாகவும், சத்தியத்தின் வடிவமாகவும், நாள்தோறும் அயராது உழைத்து தாய்த்திரு நாட்டின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவராக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். அவரின் செல்வாக்கை திசை திருப்பி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். முதலமைச்சர் இயற்கையையும் எதிர்கொள்வார், எதிர்க்கட்சிகளால் உருவாகும் செயற்கை புயலையும் எதிர் கொண்டு மக்களை காப்பார். ஆகவே மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து செயல்பட்டு வரும் முதலமைச்சருக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.