எங்களை சவாலுக்கு கூப்பிடும் தகுதி ஆ.ராசாவுக்கு கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, ஆ.ராசா பெரிய தலைவரா? எந்தக் கட்சிக்குத் தலைவர்? திமுக-வில் தலைவராக இருக்கலாம், எங்கள் கிளைச் செயலாளர் அந்தஸ்துகூட அவருக்குக் கிடையாது. ஏனென்றால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளவிலே தலைகுனிய வைத்தவர் அவர். எவ்வளவு பெரிய ஊழல், நீங்களும் பத்திரிகைகளில் போட்டீர்களல்லவா? எல்லா பத்திரிகையிலும் என்ன செய்தி போட்டீர்களென்று எனக்குத் தெரியும், ஆதாரத்தோடு இருக்கிறது. அவரைக் கைது செய்தபோது என்னென்ன செய்தி வெளியிட்டீர்கள் என்று கையில் இருக்கிறது. பத்திரிகைகளில் கொடுத்தீர்கள், ஊடகத்தில் கொடுத்தார்கள். விவாத மேடையில் விவாதித்திருக்கிறார்கள்.
இப்படி, இந்தியா மட்டுமல்ல, உலகளவில் தலைகுனிய வைத்தவர். அவரென்ன பெரிய தலைவரா? அவர் கூப்பிட்டால் நாங்கள் வரணுமா? சாதாரண ஆள். திமுக-விற்கு வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம்? சாதாரண ஆள். திமுக-விற்கு வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம். ஏனென்றால், வைட்டமின் நிறைய இருக்கிறது. அதனால் அவரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். செலவுக்கு அவ்வப்போது வேண்டுமல்லவா? அதற்காக வைத்துக் கொண்டிருக்கிறார்களேயொழிய எங்களுக்கு அவர் பெரிய ஆள் கிடையாது. அவர் கூப்பிட்டால் நாங்கள் போக வேண்டுமாம்? கூப்பிட்டால் வருபவர்கள் போவார்கள், நாங்கள் போக முடியாது. ஏனென்றால், இது அண்ணா திமுக. சாதாரணத் தொண்டனை மதிக்கக்கூடிய இயக்கம்.
அவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தார்? சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் வசதி, வாய்ப்பு எப்படி? சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் பின்புலம் எப்படி? நானெல்லாம் ஆரம்பத்திலிருந்தே விவசாயி. என்னுடைய தாத்தா, அப்பா என பரம்பரையாக நான் விவசாயம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். 30 ஆண்டு காலமாக வருமான வரித் துறையில் வேளாண் பணி சார்ந்த வருமானத்தைதான் நான் காட்டிக் கொண்டு வருகிறேன். அவர் அரசியலுக்கு வரும்போது எப்படியிருந்தார்? இதையெல்லாம் மக்கள் பார்க்காமல் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதோ, நான்கு மைக்கை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தால் பெரிய ஆளாகிவிட முடியுமா? செயலில் காட்ட வேண்டும்.
இந்தியாவே தலைகுனிகிற அளவிற்கு செயலில் காட்டியுள்ளார். அவரால் இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது. நாங்கள் தெளிவாகச் சொல்கிறேன், ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 2ஜி அலைக்கற்றை ஊழல் இல்லையென்றால், இவர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தானே அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
காங்கிரஸ் அமைச்சரவையில் ராசா அமைச்சராக இருந்தாரா? இல்லையா? அந்தக் காலகட்டத்தில்தான் அவர் துறையில் தவறு நடக்கிறதென்று சொல்லி எந்த அரசாங்கம் இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததோ, அந்த அரசாங்கமே கைது செய்ததா? இல்லையா? அப்படியானால் குற்றவாளியில்லையென்றால் சிறையில் அடைக்க முடியுமா? அவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார். எவ்வளவு வேகமாக எங்களை சவாலுக்குக் கூப்பிடும் அளவிற்கு அவருக்கு power இருக்கிறதா? power கிடையாது. இருக்கிறதென்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொன்று, நீதிமன்றம் என்ன சொல்லியுள்ளது? எவ்வளவோ கால அவகாசம் கொடுத்தோம், நீங்கள் சரியான ஆதாரம் கொடுக்காத காரணத்தால்தான் அவர் விடுவிக்கப்படுகிறார் என்று சொன்னார்களேயொழிய விசாரித்து, விசாரணையில் இவர் நிரபராதி என்று சொல்லவில்லை. இப்போது மேல்முறையீடு தொடர்ந்ததை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், வழக்கு வரும், அப்போது அவர் எங்கிருப்பார் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.