தவளை போன்ற மனப்பான்மை கொண்டவர் ஸ்டாலின்.!குறை கூறுவது தான் அவருக்கு வேலை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி.!

0
Follow on Google News

தமிழ்நாடே பாராட்டினாலும் எங்களை குறை கூறுவது தான் ஸ்டாலினுக்கு வேலை, அவர் குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். நிவர் புயல் மழையால் சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் சேதமடைந்த படகுகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புயல் நிவாரண நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. காற்றின் வேகம் காரணமாக இன்ஜின் மற்றும் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளேன். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து, சேதங்கள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அனுப்புகிறோம். அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று அவர்கள் கணக்கெடுத்து அரசிடம் ஒப்படைப்பார்கள். மேலும் இந்த பணி இன்று நாளைக்குள் முடிவடையும். அதன் பின்னர் சேதங்கள் குறித்து முழுவிவரம் அறிவிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்திலிருந்து கழக அரசு பாடம் கற்றுகொள்ளவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுப்பற்றி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், சுனாமியின் போது தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் நிவாரண நடவடிக்கை எடுத்து உலகம் முழுவதும் பாராட்டு பெற்றது கழக அரசு தான். அந்த அனுபவம் எங்களுக்கு உண்டு. 2015ம் ஆண்டு மழை குறித்து நிறைய அனுபவங்கள் கழக அரசுக்கு உண்டு. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக் கும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தேவை இல்லாத அறிக்கை கொடுத்து, அதனை திசை திருப்பும் விதமாக அறிக்கை விடுப்பது ஸ்டாலினுக்கு ஒரு வழக்கமாகவும், வாடிக்கையாகவும் உள்ள விஷயம். எங்களை பொறுத்தவரை குறை கூறுவது தான் ஸ்டாலின் வேலை.

ஏனென்றால் முதலமைச்சர் கனவிலே அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால் எப்பொழுதுமே முதலமைச்சராக ஆக மாட்டார். அ.தி.மு.க. தான் அடுத்த தேர்தலிலும் வென்று ஆட்சியை பிடிக்கும். அதனால் அவர் எங்களை குறை கூறிக் கொண்டே இருப்பார். தமிழ்நாடே பாராட்டினாலும் எங்களை குறை கூறுவது தான் அவருக்கு வேலை.இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம். அவர் மேயராக இருந்த காலத்தில் சென்னைக்கு பெரும் வெள்ளம் வந்தது, அந்த காலத்தில் எங்காவது ஆய்வு மேற்கொண்டாரா, மேயராக இருந்து பணி ஆற்றாமல் பெங்களூரு சென்றார்.

மேலும் இந்தியா டுடே கணக்கெடுப்பின் படி மூன்றாவது முறையாக சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு? பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ஸ்டாலின் தான் சொல்கிறார் நாடு சரி இல்லை, நிர்வாகம் சரி இல்லை என்று. மூன்றாவது முறையாக முதல் இடத்திற்கு வந்துள்ளோம். இதனை பாராட்ட அவருக்கு மனம் வராது. தவளை போன்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர் ஸ்டாலின். எப்போதுமே குறை கூறி கொண்டிருந்தால் மக்கள் அவரை வெறுத்து விடுவார்கள். இதேபோன்று திமுக காலத்தில் நிஷா புயல் வந்தது. அப்போது ஒரு ரூபாய் கூட மீனவர்களுக்கு திமுக அரசு கொடுத்தது கிடையாது என்று தெரிவித்தார்.