மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அனுமதி நீட் தேர்வினாலே! புள்ளி விவரங்களை வெளியிட்ட நாராயணன் திருப்பதி.!

0
Follow on Google News

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 313 தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் இணைந்துள்ளார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு அளித்த பின் இது சாத்தியமாயிற்று. ஏப்ரல் 15, 2017 அன்று, அரசு மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான இந்த பரிந்துரையை செய்தது, அன்றைய மத்திய பாஜக அரசின் அமைச்சரும், இன்றைய பாஜகவின் அகில இந்திய தலைவருமான ஜே.பி.நட்டா அவர்கள் தான். நீட் தேர்வுக்கு முன் 2006-2016 வரையிலான 10 வருடங்களில் 29,925 அரசு மருத்துவ கல்லூரி இடங்களில் 213 மாணவ, மாணவிகள் மட்டுமே அரசு பள்ளியை சேர்ந்தவர்கள். தனியார் மருத்துவ கல்லூரிகளின் 6132 இடங்களில் 65 மாணவ, மாணவிகள் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். அதாவது 36,057 இடங்களில் 278 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள்.

நீட் தகுதி தேர்வினால் ஒரே ஆண்டில் 313 தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், நீட்டுக்கு முன் நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது போன்ற ஒரு தோற்றத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 10 வருடங்களில்,12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், சராசரியாக அரசு பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு 30 பேர் கூட இடம் பெறாதது ஏன் என்ற கேள்வியை தமிழகத்தில் யாரும் எழுப்பாதது ஏன்? கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மருத்துவ கல்வியை வியாபாரமயமாக்கியவர்கள், திட்டமிட்டே அரசு பள்ளி கல்வி முறையை முடக்கியிருந்தார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ‘நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதன்’ காரணத்தினால் மட்டுமே 313 அரசு பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஆண்டு நுழைய முடிந்தது. இல்லையெனில், மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ அனுமதியை பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை.

நீட் தகுதி தேர்வினால் மட்டுமே 10 வருடங்களில் அனுமதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் எட்டப்பட்டுள்ளது எனபதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பால், அலட்சியமான கல்வி திட்ட அமைப்பால், இது நாள் வரை தகுதி இருந்தும் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற முடியாத அரசு பள்ளி மாணவ மாணவிகள் தற்போது 10 மடங்கு அதிகமா மருத்துவ படிப்புகளில் நுழைந்துள்ளது நீட் தகுதி தேர்வினால் மட்டுமே என்ற இனிப்பான உண்மை சிலருக்கு கசக்க தான் செய்யும். இது நாள் வரை தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை மறைத்து பாஜகவின் மீது குறைசொன்னவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீட் தகுதி தேர்வினால் மட்டுமே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற முடிந்தது என்ற உண்மையை மக்கள் இனி உணர்வார்கள். அதை உணரும் போது, பாஜக வின் நிலைப்பாட்டை வரவேற்பார்கள். அந்த உண்மை நீட் தேர்வை எதிர்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை / தோல்வியை தரும். என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.