மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு.! தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

0
Follow on Google News

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டபேரவையில் கடந்த மார்ச் 21-ந்தேதி 110-விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் வகையில் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற, தேவைப்படும் அனைத்து புள்ளி விபரங்களையும் தொகுத்து, உரிய பரிந்துரையையும், அரசுக்கு வழங்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த ஆணையர் மேற்கண்ட பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் குறைந்த அளவில் சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களின் சமூக பொருளாதார நிலையை மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரையை அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு கடந்த 2017-18-ம் ஆண்டில் இருந்து நடக்கிறது. இந்த வருடத்திலிருந்தே மருத்துவ படிப்பில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது. இந்த நிலையை ஆராய்ந்து, அதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஆய்வு செய்து தன்னுடைய அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பொருளாதாரம், பயிற்சி வாய்ப்புகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே மருத்துவ படிப்பில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்புவது அவசியம். எனவே நீட் தேர்வில் தகுதி பெறும், அரசு பள்ளிகளில் 6-ம்வகுப்பில் இருந்து மேல்நிலைக் கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கலாம். இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையேயுள்ள சமமற்ற நிலை மாறும் என்று குறிப்பிட்டிருந்தது.

மேற்கண்ட இந்த பரிந்துரை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து இருதரப்பு மாணவர்களிடையே ஒருமித்த நிலை ஏற்பட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். உள்பட மற்ற மருத்துவக்கல்விகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு முடிவு செய்தது. தொடர்ந்து கடந்த ஜூன் 8-ந் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதிபதி கலையரசன் ஆணையத்தின் பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

தொடர்ந்து கடந்த ஜூன் 15 மற்றும் ஜூலை 14-ந்தேதிகளிலும் அமைச்சரவை கூடி ஆய்வு செய்து, சில முடிவுகளை அரசு எடுத்தது. இதன் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கலாம்.

எந்தெந்த மருத்துவ கல்விக்கெல்லாம் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி,ஓமியோபதி) நீட் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதிலும் இந்த உள்ஒதுக்கீடு பொருந்தும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு அளிக்கும் கல்வி இடங்கள் ஆகியவற்றிற்கும் இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதற்கு உயர்நீதிமன்றத்தின் அரசு தலைமை வழக்கறிஞரின் ஒப்புதலை அரசு பெற்றது. இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் இந்த உள்ஒதுக்கீட்டை வழங்கும் அரசின் முடிவு, அரசியல் சாசன சட்டத்தின் 14 மற்றும் 15-ம் ஷரத்துகளுக்கு முரணானது அல்ல என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. எனவே இதில் முடிவெடுப்பதற்கு அவசர நிலை எழுந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 162-ம் ஷரத்தின்படி, தமிழக அரசே கொள்கை முடிவுகளை எடுத்து அதை அரசாணையாக வெளியிடுகிறது.

இதன் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்.,பி.யூ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். ஆகிய கல்வியில் சேர்வதற்கு 7.5 சதவீதம்உ ள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உள்ஒதுக்கீட்டின்படி நடக்கும் மாணவர் சேர்க்கையில் 2020-21-ம் ஆண்டில் இருந்து 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.

இதுபோல அரசு தற்போது குறிப்பிட்ட பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறாத பள்ளிகளிலோ 8-ம் வகுப்பு வரை கட்டாய கல்விச் சட்டத்தின்படி சேர்ந்து படித்து, அதனை தொடர்து மீதமுள்ள உயர் கல்வியை அரசுப் பள்ளியில் முடித்துள்ள, மிகப் பின்தங்கிய பிரிவை சேர்ந்த மாணவர்களும் அரசு பள்ளி மாணவர்களாக கருதப்படுவார்கள். இந்த உள்ஒதுக்கீட்டை பெறுபவர்களை தவிர, மற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி இடங்களை பெறுவதற்கு போட்டியிட தகுதி உண்டு. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.