கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், கருவுற்ற பெண்ணும், குழந்தையும் உயிரிழந்திக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம். நிறைமாத கர்ப்பிணியான கற்பகத்துக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக தியாகதுருகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
காலை 7.30 மணிக்கு மணிக்கு சேர்க்கப்பட்ட அவர் கடுமையான வலியில் துடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களோ, செவிலியர்களோ எந்த மருத்துவமும் அளிக்கவில்லை. கடுமையான வலி இருந்தாலும் குழந்தை பிறக்க நேரமாகும் என்று கூறி விட்டு செவிலியர்கள் சென்று விட்டனர். மருத்துவர்களோ கற்பகம் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கற்பகம் செவிலியர் பட்டம் பெற்றவர் ஆவார். அந்த அனுபவத்தில் தம்மால் வலி தாங்க முடியவில்லை என்றும், தமக்கு அறுவை சிகிச்சை செய்வதாவது குழந்தையை வெளியில் எடுக்கும்படியும், முடியாவிட்டால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பும்படியும் மன்றாடியிருக்கிறார். ஆனால், மருத்துவர்களோ, செவிலியர்களோ கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மாலை 4.30 மணி வரை குழந்தை பிறக்காத நிலையில், கற்பகத்தின் வயிற்றை முரட்டுத்தனமாக அழுத்தி குழந்தையை வெளியில் எடுக்க செவிலியர்கள் முயன்றுள்ளனர். இந்த முயற்சியில் குழந்தை இறந்து கருப்பையுடன் வெளியில் வந்தாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மிகக்கடுமையான உதிரப்போக்குடன் கற்பகம் உயிருக்கு போராடியிருக்கிறார். அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பும்படி அவரது குடும்பத்தினர் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவற்றை மருத்துவர்களும், செவிலியர்களும் கண்டுகொள்ளவில்லை. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்படுத்திய பிறகு தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் கற்பகம் இறந்து விட்டார்.
தியாக துருகம் மருத்துவமனைக்கும், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 10 நிமிடங்கள் தான். குழந்தை இறந்த போதே கற்பகத்தை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தால் குறைந்தபட்சம் தாயையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தாய், சேய் இருவருமே உயிரிழந்துள்ளனர்.