பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில். முத்தையா முரளிதரன் அவர்களுடைய வாழ்க்கைப்படத்திலிருந்து விஜய்சேதுபதி அவர்கள் விலகி விட்டதாக அறிந்தேன். மகிழ்ச்சி ! நன்றி ,அவர் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடித்து சிங்கள அரசின் இன அழிப்பு வேலைக்கு வெள்ளையடிக்கக் கூடாது என்று விரும்பினோம், அதைத்தான் எடுத்துச் சொன்னோம். அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் அவருடைய உரிமை.
ஒரு கலைஞனின் உரிமையில் யாரும் தலையிட முடியாதெனினும், அந்த உரிமையின் பின்விளைவு ஓர் இனத்தின் பின்னடைவாக இருந்துவிடக் கூடாதென்பதும் ஒரு கூறு !. ஒரு தனிமனிதனின் உரிமை, பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் நியாயமான போராட்டத்திற்குத் தடுப்புச்சுவராய் மாறிவிடக் கூடாது என்பதால், மறைக்கப்பட்ட உண்மைகளை எடுத்துரைத்தோம். அவரும் இப்போது விலகிவிட்டார். சிக்கல் தீர்ந்தது.
ஆனால், அதை அப்படியே விடாமல், உணர்வாளர்களை மதித்து அவர் தானாக விலகவில்லை, விலக்கப் பட்டார், இது நியாயமா, அழகா, மானமா என்று ஒரு குரல் எழும்பியதைக் கவனித்தேன். அவையெல்லாம் திரைத்துறையைப் பற்றி அறியாத வெளியார் எழுப்பும் குரல் !. அவர் பலநாட்கள் மௌனம் காத்ததற்கே, பொருளாதார/ஒப்பந்த/சட்ட நெருக்கடிகள் இருக்கலாம் என்று யூகித்தேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் எனில் பல பிணைகள் அதில் வைக்கப் பட்டிருக்கும். அவ்வளவு எளிதில் ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது.
எனினும் பிரச்சினை பெரிதானதால், தயாரிப்புத் தரப்பே விடுவிப்பதுதான் வழியாக இருந்திருக்கும். அதுதான் நடந்திருக்கிறது. எனவே, இந்த அழகா, மானமா வகையறாக்கள் சற்று அமைதி காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். அடுத்ததாக, அவருக்கு தரப்பட்ட அச்சுறுத்தல் !. விலகலுக்கு முன்னும் பின்னுமாக இரண்டு வகை அச்சுறுத்தல்கள் ! அறிவுறுத்தலாம், அச்சுறுத்தலாமா ? இரண்டையுமே கடுமையாகக் கண்டிக்கிறேன்.
அதிலும் நேற்றுத்தான் தெரிய வந்தது மிகவும் ஆபாசமான மிரட்டல் ஒன்று விடுக்கப் பட்டது என்று !. அவன் யாராக இருந்தாலும் கண்டுபிடித்துக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டுமென்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன். என்ன கொடுமை !. சமூக வலைதளங்களில் புழங்கும் எல்லோருக்கும் இப்போது இங்கே என்ன மாதிரி ‘பண்பாடு’ நிலவுகிறது என்று நன்றாகவே தெரியும். ஆரம்ப காலங்களில் அதிர்ச்சியுற்றவர்கள்கூட பின்னாட்களில் தோல் மரத்துப்போய் துடைத்து நகரப் பழகிவிட்டோம். அதன் விளைவுதான் இது !. சமூக தளங்களில் பண்பாடு, மரபு, நாகரிகம் கிஞ்சித்தும் கிடையாது. சமூகமே இப்படியா வக்கிரம் பிடித்ததாக இருக்கும் ??
ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை நாகரிகமாகச் சொல்ல முடியாதா ?. எடுத்ததற்கெல்லாம் ஆபாச அர்ச்சனை, வசவு, அச்சுறுத்தல், அலங்கோலம்… நான் விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதி விட்டேனாம், எனக்கு எதிர்த்தரப்பு உடனே என் சொந்த வாழ்க்கையை வழித்தெடுத்து, வகுந்தெடுத்து, வகைபிரித்து, வக்கிரம் வழியவழிய நக்கிச் சுவைத்தாகி விட்டது. பெண்களென்றால் உன்னை ‘அப்படி/இப்படிச் செய்து விடுவேன்’, ஆண்களென்றால், ‘உன் வீட்டுப் பெண்களை அப்படி/இப்படிச் செய்து விடுவேன்’…. ஆக மொத்தம், ‘பெண்களைச் செய்வதைத்’ தவிர வேறொன்றும் தெரியாத ஆண் சென்மங்கள் நிறைந்த உலகம் !. விளங்கி விடும் !.
அதேசமயம், இந்த வக்கிரம் பிடித்தவன் ஒரு ‘தமிழ்தேசியவாதி’ என்பது போல் ஒரு பரப்புரை ஆரம்பித்தது… பிறகு அது ஒரு போலி அடையாளன் என்பது தெரிய வந்திருக்கிறது. வக்கிரத்துக்குத் தமிழ்த்தேசியம், திராவிடம், இடதுசாரி, வலதுசாரி, இசங்கி,கிசங்கி,முசங்கி வேறுபாடெல்லாம் கிடையாது, வார்டன்னா அடிப்போம் அவ்வளவுதான் ! அத்துமீறிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை உண்டு என்று அரசாங்கம் காட்ட வேண்டும். அதுதான் இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும்.
சந்தடிசாக்கில், தமிழ்த்தேசியம் என்பதையே வக்கிர சித்தாந்தமாக சித்திரித்ததையும், விடுதலைப் போராட்டம், ஈழப்போர், இனப்படுகொலை, அகதிகள், அனைத்தையும் கொச்சைப் படுத்தியதையும் கவனித்தேன். முட்டாள் திராவிட-தமிழ்த்தேசிய குடுமிப்பிடிகளில் தமிழர் உரிமைக்குரல் மறக்கடிக்கப்படுவதை கவனிக்க மாட்டீர்களா மண்டூகங்களே !. போய் ஓரமாக விளையாடுங்கள், எங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது.
அடுத்ததாக, என் கடிதத்தில், தமிழீழத் தேசியத் தலைவராக நடியுங்கள் என்று சொன்னது ‘நடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியல்ல ; நடிப்பதாக இருந்தால் அந்தத் தரப்பில் இல்லை, இந்தத் தரப்பில் நடிக்க வேண்டும் என்று ஒப்பிடுவதற்காகவே !. கருத்து, கருத்துரிமை பற்றிய விவாதத்தில் கவனித்தேன் அவரவர் வசதிக்கேற்ற வரைமுறைகளை வைத்துக் கொண்டதை !. இட்லர், இடியமீன், போல்பாட், செங்கிஸ்கான் படமெல்லாம் எடுக்கக் கூடாதா, நடிக்கக் கூடாதா என்று !. ஆகா…தாராளமாக எடுக்கலாம், நடிக்கலாம்… ஆனால் ஒரு இட்லரையோ இடியமீனையோ போற்றுதலுக்குரிய நபராகக் காட்டவே முடியாது…இன்னார் இப்படியான இரத்தக் காட்டேறியாக இருந்தார் என்று அவர்களின் இருண்மையைத்தான் காட்ட முடியும்.
கருத்து சுதந்திரம் வேறு, கருத்துத் திரிப்பு சுதந்திரம் வேறு ! ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ! அதை எடுத்துச் சொல்வது கருத்துச் சுதந்திரம். அப்படியொன்று நடக்கவேயில்லை என முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது கருத்துத் திரிப்புச் சுதந்திரம் !. பத்தாண்டுகளின் பின்னும் நம்மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை, இன்னும் ஐநாவுக்கு நடையாய் நடக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் வேண்டி உடன் நிற்பதல்லவா கருத்துச் சுதந்திரம் ?! முரளி கருத்துத் திரிப்புக்கு நிற்கட்டும், நாம் கருத்துக்கு நிற்போம். என கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.