பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்ததாவது.. கடந்த 10 நாட்களாக என் முகநூல் பக்கத்திற்குள் நுழைய முடியாமல் ஏதோ சிக்கல் நேர்ந்து விட்டது. முயன்றால், யாரோ என் பக்கத்தில் நுழைய முயன்றதால் முடக்கப் பட்டிருப்பதாகவும் என்னை அடையாளம் காட்டி நுழையுமாறும் அறிவுறுத்தியது. அதன்படியே முயன்றால் – அதாவது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், செல்பேசி எண்களுக்கு வரும் கடவுச்சொற்களை உள்ளிடுதல் – எல்லாம் சரியாக இருக்கிறது என்று தகவல் வரும்,
ஆனால் மீண்டும் அதே ‘அடையாளம் காட்டு’ இடத்துக்கே வந்து சேரும். பலப்பல வகையில் முயன்றும் – சமரனின் பக்கத்திலிருந்து முயன்றும், நண்பர்களை முகநூலுக்குப் புகாரளிக்கச் செய்தும், என் மின்னஞ்சல், டுவிட்டரிலிருந்து நானே புகாரளித்தும் – ஒன்றும் நடக்கவில்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டேன். முக்கியமான பாடல் வேலைகள் இருந்ததால் இதையே தொங்கிக் கொண்டிருக்க முடியவில்லை.
பிறகு நண்பர்களின் உதவியுடன் கலிபோர்னியாவில் மார்க்கின் வீட்டுக் கதவையே தட்டிய பிறகுதான் ஒருவழியாக நம்கதவு திறந்தது. பத்துநாட்கள் நான் இல்லையென்றால் என்னென்ன அக்கப்போர்… அதாவது நான் இல்லையென்றாலும் உலகம் நிற்கவில்லை, என்னைப் பொருட்படுத்தாமல் அதுபாட்டுக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. என்ன, நாம் முகநூலில் இருந்திருந்தால் நம் பங்குக்கு நாம் வரிந்து கட்டியிருப்போம் அவ்வளவுதான்.
தோழர் திருமாவின் ‘வள்ளுவர் கிறிஸ்துவர்’ என்கிற சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நிச்சயம் எதிர்வினையாற்றியிருப்பேன். திரு வைகோ அவர்களின் ‘ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை, கிறிஸ்துமஸ், ரம்சான்களுக்கு வாழ்த்துவது என்பதற்கான பதிலுக்கும் பதிலளித்திருப்பேன். ஜெய்பீம் குறிப்பிடத்தக்க ஒன்று. நான் பார்க்கவில்லை. அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது, என் பாடல் ‘என்னுயிரே என்னுயிரே’வைப் பதிவிட்டிருக்க வேண்டும்.
சாய் விக்னேஷின் விலங்குநலக் கூடத்தில் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப் பட்டதைப் பதிவிட்டிருப்பேன். தீபாவளியின் வெடிகள், காற்றுமாசு உள்ளிட்டவை பேசப்பட வேண்டும். பல்வேறு பரிசுகள் பெற்ற இலக்கிய நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்புறம் அந்த பிக்பாஸ் பின்னூட்டங்கள், நார்க்கோஸ் மெக்சிகோ மூன்றாம் பருவம்… நாளை என் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி சொல்ல முடியாதே என்கிற பெருங்கவலை வேறு.
எப்படியோ இப்போது திரும்பி வந்து விட்டேன், முடக்க நினைத்தவர்களுக்கு ஒரு செய்தி : என் வாழ்க்கை வரலாறு தவணை முறையிலேனும் சொல்லப்பட்டு விடும், அனைத்து ஆதாரங்களும் சிறுகச்சிறுக பதிவேற்றப்படும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தவிர, இப்போது மார்க் நம் உறவினர் ஆகிவிட்டார். எப்போது வேண்டுமானாலும் கதவு தட்டலாம்.