30 ஆயிரம் அடி உயரத்தில் குழந்தை பெற்ற ஆப்கன் பெண்: குவியும் பாராட்டுக்கள்

0

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலிருந்து ஏராளமானோர் அகதிகளாக வேறுநாட்டில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அப்படி அகதிகளாக வருவோர்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தஞ்சம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்ற துருக்கி விமானத்தில் பயணம் செய்த சோமன் நூரி என்ற 26 வயதுடைய ஆப்கன் பெண்ணுக்கு, குவைத் வான்வெளியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் டாக்டர் இல்லாதால், விமான ஊழியர்களே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஹவ்வா என்று பெயர் வைத்துள்ளனர். சோமன் நூரிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் தாஜ் முகமது ஹம்மத் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் அந்த விமானத்தில்தான் பயணித்துள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியாக விமானத்தில் ஏறிய சோமன்நூரி அழகான குழந்தையுடன் பர்மிங்காம் நகரில் காலடியெடுத்து வைத்த அந்த தருணம் உண்மையிலேயே அவருக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதான இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை. அகதிகளாக சோகத்துடன் தங்களது நாட்டைவிட்டு வெளியேறிய இந்த தம்பதிகளுக்கு, 30 ஆயிரம் அடி உயரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் இருக்கிறது.