முடிஞ்சா இங்க வா… ராகுலுக்கு சவால் விடுத்த ஒவைசி.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தெலுங்கானா : தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் எம்பியும் AIMIM நிறுவனருமான அசாதுதீன் ஒவைசி ராகுலை முடிந்தால் தெலுங்கானாவில் போட்டியிட்டு பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். இது தற்போது காங்கிரஸாரிடையே சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த வியாழனன்று இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா வந்த காங்கிரஸ் தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் “அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் ஆளும்கட்சியான TRS க்கும் காங்கிரசுக்கும் நடக்கும் நேரடி யுத்தம். நாம் ஆளும்கட்சியை தோற்கடிப்போம். தெலுங்கானாவின் கனவுகளை சிதைத்தவர்களை மன்னிக்கமாட்டோம்.

லட்சங்களை கோடிகளை இளைஞர்களிடமிருந்தும் ஏழை மக்களிடமிருந்தும் திருடியவர்களை மறக்க மாட்டோம். இந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவாசயிகளின் விதவை மனைவிகளின் கண்ணீரை நாம் மறக்க முடியுமா. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு யார் காரணம்” என உரையாற்றினார். மேலும் ஒஸ்மானியா பல்கலைக்கழக்தில் மாணவர்களிடையேயும் உரையாற்றினார்.

ராகுலுக்கு பதிலடி கொடுத்த ஒவைசி செய்தியாளர்களிடம் ” நான் சொல்கிறேன் ராகுல் வயநாட்டிலும் தோற்றுப்போவார். இங்கு வாருங்கள் ஹைதராபாத்திலிருந்து போட்டியிடுங்கள். உங்கள் லக்கை பாருங்கள். வேண்டுமென்றால் மேடக்கிலிருந்து போட்டியிட்டு பாருங்கள். நான் சவால் விட்டு சொல்கிறேன்” என தெரிவித்தார்.

அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசியல் கட்சிகள் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கியுள்ளன. ஊழல் மற்றும் விவசாயிகள் பிரச்சினை மற்றும் அரசு ஆசிரியர்கள் பணியிட மாற்ற பிரச்சினை உள்ளிட்டவை ஆளும்கட்சிக்கு பாதகமாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பிஜேபி தலைவர்கள் அமித்ஷா ஜேபி நட்டா ஆகியோர் பேரணி நடத்திய நிலையில் தற்போது காங்கிரசும் பேரணி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.