இந்தியன் 2… ஊழல் பணத்தில் ஊழலுக்கு எதிரான படம்… இந்தியன்-2 படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

0
Follow on Google News

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், உலகமெங்கும் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படம் 80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால், தற்போது 90ஸ் மற்றும் 2k கிட்ஸ்களே அதிகளவு தியேட்டருக்கு போவதை கருத்தில் கொண்டு, இந்தியன்2 படத்தை 2k கிட்ஸ்களுக்கு ஏற்றாற்போல் ஷங்கர் இயக்கினார்.

ஆனாலும் இந்த படம் ரிலீஸ் ஆனதிலிருந்து கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும், முதல் பாதி சுமாராகவே உள்ளது என்றும், இரண்டாம் பாதி ஓரளவு பரவாயில்லை என்றும்தான் கூறி வருகின்றனர். மேலும் இந்தியன்2 படத்தில், லஞ்சம், ஊழல் ஆகியவற்றை மையப்படுத்தி தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டு அரசியலில் நடைபெறும், ஊழல், லஞ்சம் குறித்து ஏன் தைரியமாக பேசவில்லை என்றும் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியன் 2 ஊழலுக்கு எதிராக எடுத்த படம் இல்லை, ஊழலிலேயே எடுத்த படம் என்றும், 300 கோடியில் இப்படி ஒரு படம் எடுத்ததே மிகப் பெரிய ஊழல் தான் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். படம் நன்றாக இருக்கும் என எங்களை ஏமாற்றி டிக்கெட் எடுத்து பார்க்க வைத்து, நீங்கள் தான் ஊழல் செய்திருக்கிறீர்கள் என்றும் படக்குழுவை சாடி வருகின்றனர்.

ஒருபக்கம் டிவிட்டரில் #Indian2disaster என்கிற ஹேஷ்டேக்கும் #Goback_indian என்ற ஹேஷ்டேக்கும் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இந்தியன் முதல் பாகத்தின் கிளைமேக்சில் சந்துருவுடன் சேர்ந்து சேனாதிபதியும் சாவது போல சுஜாதா கதை எழுதி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இப்போது இந்தியன் 2 எடுத்திருக்கும் அவசியமே வந்திருக்காது என்றும் காட்டமாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் இந்தியன் 2 படம் ஏமாற்றிவிட்டது, கமல் ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும், இந்த படத்தை அவராலாயே காப்பாற்ற முடியாது, கதை ஒன்றுமே இல்லை, இயக்குனர் ஷங்கரின் சிறப்பை எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை எனவும் கூறிவருகின்றனர். மேலும் பல தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காற்று வாங்கி கொண்டும் இருக்கிறது. எனவே, இந்த படம் பெரிய வசூலும் ஈட்டவில்லை என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதோடு இந்த படத்தில், ஊழல்களை பற்றி பேசினாலும், தமிழக அரசியல் கட்சிகளில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசவில்லை, அதற்கு காரணம் ஆளும் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்திருப்பதாலா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக ஆடியன்ஸ்களுக்காக படம் எடுத்துவிட்டு தமிழக அரசியலில் நடக்கும் ஊழல்களை பற்றி ஆணித்தரமாக அடித்து பேசாமல், மேலோட்டமாக இந்த படத்தை நகர்த்திச் சென்றதே இந்த படத்திற்கான மிகப்பெரிய மைனஸ் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் பற்றி எல்லாம் விமர்சிக்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலர் டிவி பற்றி விமர்சிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இப்படி அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை, தொட்டும் தொடாமலும் பேசி, இந்த படத்திற்கு நிறைய நெகட்டிவ் ஆடியன்ஸ் வந்துவிட்டனர்.

எனவே தான் இந்த படத்தில் பிரம்மாண்டமான செட்டப்கள், பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் போன்ற, பல விஷயங்கள் இருந்தாலும் கூட ஒரு உணர்வு ரீதியான ஒட்டுதலை இந்த படம் ரசிகர்களுக்கு தரவில்லை என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆக மொத்தம் இந்தப் படத்தில் நிறைய சொதப்பல்கள் இருப்பது போல், இந்த படமும் சொதப்பிவிட்டது என்றே சினிமா விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.