பூனைக்கு பரிவு காட்டியவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்

0
Follow on Google News

ஐக்கிய அமீரகத்தின் வர்த்தக நகரான துபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் உள்பட பலபேர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களில் சிலபேர் வீட்டில் செல்ல பிராணியாக பூனைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பூனை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிடுவது போல் தொங்கிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பூனையை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, தங்களிடம் இருந்த துணி ஒன்றை எடுத்து வலைபோல விரித்தனர். அப்போது திடீரென அந்த பூனை 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தது. சரியாக இவர்கள் விரித்த வலையில் அந்த பூனை விழுந்ததால் பத்திரமாக மீட்கப்பட்டது.

இதை வீடியோவாக எடுத்த ஒருவர், அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ ஐக்கிய அமீரகம் முழுவதும் வைரலாக பரவியது. இது அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத்தின் கவனத்திற்கும் சென்றது. அவர்களை பாராட்டி தனது வலைத்தளத்திலும் துணை அதிபர் பாராட்டு தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாது, அந்த பூனையை காப்பாற்றிய நாசர், அஷ்ரப், அதிப் மெஹமூத், வீடியோவை வெளியிட்ட ரசீத் ஆகியோரின் மனிதாபிமானத்தை பாராட்டி தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்கினார். நாசர், இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர். அஷ்ரப் மெரோக்காவைச் சேர்ந்த வாட்ச்மேன், அதிப் மெஹமூத் பாகிஸ்தானை சேர்ந்தவர். வீடியோவை வெளியிட்ட ரசீத் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனையின் மீது பரிவுகாட்டிய இந்த 4 பேருக்கும் ஐக்கிய அமீரக அரசு பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல், அவர்களின் மனிதாபிமானத்துக்கு பரிசாக ரூ.40 லட்சமும் வழங்கியது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.