பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு சலசலப்புக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பாராளுமன்றதில் நிறைவேறிய முக்கிய இரண்டு மசோதாக்கள்..!

0
Follow on Google News

நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இரு முக்கியத்துவமுள்ள மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. இன்றைய கால கட்டத்திற்கு மிக அவசியமானவைகளாக இந்த மசோதாக்கள் விளங்குகிறது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா : கொரோனா தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடப்பு மூலதனம் கிடைக்க இந்த மசோதா உதவும். இந்த மசோதா வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு காரணிகளாக செயல்படும் உரிமங்கள் மற்றும் அதன் சட்ட திட்டங்களில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் சங்கிலி தொடர் போல் பாதித்திருக்க கூடிய பல்வேறு துறைகளில், கொள்முதல் செய்த நிறுவனங்கள் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தாமதமாகிறது. அதனால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடர முடியாது தவிக்கின்றன. இந்த திருத்தத்தின் மூலம் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு வரவேண்டிய தொகையினை (Recieivables) வேறு நிதி நிறுவனத்திற்கு விற்று விட முடியும்.

இதன் மூலம் உடனடி நிதி பெற்று உற்பத்தியை அதிகரிக்க முடியும். இது வரை ‘ஏழு’ வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மட்டுமே இது காரணி வர்த்தகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த திருத்த மசோதாவின் மூலம் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் நுழைய வழிவகை செய்யப்பட்டிருப்பதால், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக நிதியுதவி தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையால் உற்பத்தியை தொடர முடியாது தவிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மிக பெரிய பலனை அளிப்பதோடு, வேலைவாய்ப்பும் பெருகும்.

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொழில் முறை மேலாண்மை மசோதா : இந்த மசோதாவின் மூலம், தமிழகத்தின் தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹரியானா மாநிலம் குன்ட்லியில் உள்ள உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனமும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும். இந்த இரு நிறுவனங்களும் அதிக தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படும்.

மிக சிறந்த ஆசிரியர்களை பெற்று பல புதிய மற்றும் இந்த துறையில் பல்வேறு புதுமையான பாட திட்டங்களை மேற்கொள்வதோடு நவீன ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்கும்.உணவு உயிரி மீநுண் தொழில்நுட்பம்(Food Bio Nanotechnology) மற்றும் குளிர் சங்கிலி தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேலும் தேவைப்படும் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்ய முனையும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்துறை சார்ந்த கல்வி மையங்களை துவக்குவதோடு, திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும். ஐ ஐ டி மற்றும் ஐ ஐ எம் போன்ற கல்வி நிறுவனங்களை போல் உணவு பதப்படுத்தும் துறையில் சர்வதேச தொழில்நுட்பத்தோடு விளங்கும்.

இது குறித்தெல்லாம் கவலைப்படாமல், நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவும் ஊதி பெரிதாக்கி, நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படாமல், மக்கள் நலன் குறித்த சிந்தனையில்லாமல் பாராளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தி கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல. ஆனாலும், பொறுப்புள்ள கட்சியாக பாஜக நாட்டு மக்களின் நலன் குறித்த பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும். என நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.