கேரள எல்லையை உடனே தமிழக அரசு மூட வேண்டும்.. சீமான் எச்சரிக்கை..!

0
Follow on Google News

தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில்,

புதிதாக 50க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனால், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கேரளாவில் தொடங்கிவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கேரள – தமிழக எல்லையான பாறசாலைப் பகுதியில் கடந்த 9 ஆம் தேதி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் கேரள எல்லையோர மாவட்டங்களில் வாழும் தமிழக மக்கள் பெரும் பதற்றத்திற்கும், பாதுகாப்பின்மைக்கும் ஆளாகியுள்ளனர்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது மிகத் தாமதமாக எல்லைகளை மூடியதால் மிகப்பெரிய அளவில் தொற்றுப்பரவல் அதிகரித்ததோடு, அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்கவும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆகவே, அதனைப் படிப்பினையாகக் கொண்டு, கடந்த காலத்தைப்போல அலட்சியமாக இருந்திராமல், கொரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் கேரள மாநிலத்துடனான அனைத்து எல்லைகளையும் உடனடியாக மூடி,

கொரோனா சோதனையை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழைப் பெற்ற பின்னரே, யாவரையும் அனுமதிக்க முன்வர வேண்டுமெனவும், கொரோனோ தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து தமிழகம் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.