ஒரே ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.! பிரதமர் பெருமிதம்.!

0
Follow on Google News

பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். தமிழ்நாடு, அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் உரையாடினார். வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அவர்கள் எவ்வாறு பலனடைந்தார்கள் என்று விவசாயிகள் விவரித்தனர்.

ஒரே ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அறிமுகவுரை ஆற்றிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வேளாண்துறை மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது என்றார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நல்லாட்சி மற்றும் வேளாண் துறையின் சீர்திருத்தங்களுக்கான அடித்தளத்தை அமைத்ததாகவும், 2014-ஆம் ஆண்டில் இருந்து மோடி தலைமையிலான அரசு அவற்றை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் ஆகியவையும் அதிகரித்திருப்பதாகவும், 10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் பலனடைந்திருபதாகக் கூறிய அமைச்சர், கோவிட் பொதுமுடக்கத்தின் போதும் விவசாயிகளை நிதி சென்றடைந்ததாகக் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் மனதில் புதிய விவசாய சட்டங்களைப் பற்றிய சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சந்தேகங்களைத் தீர்க்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மேற்கு வங்கத்தில் உள்ள 70 இலட்சம் விவசாயிகள் இந்த வசதியை ஏற்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 இலட்சம் விவசாயிகள் இந்த நிதி வசதி பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்கள் என்றும் ஆனால் அந்த மாநில அரசு பரிசோதனை வழிமுறைகளுக்காக அதனை வெகுகாலம் நிறுத்தி வைத்து விட்டது என்றும் பிரதமர் கூறினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கள் குறித்துப் பேசாத கட்சிகள், தில்லிக்கு வந்து விவசாயிகள் குறித்துப் பேசுகின்றனர் என்று அவர் கூறினார். இந்தக் கட்சிகள் தற்போது வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு மண்டிகள் இல்லாதது குறித்துக் கவலைப்படுகிறார்கள். ஆனால் கேரள மாநிலத்தில் ஏ பி எம் சி மண்டிகள் இல்லை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இவர்கள் கேரளாவில் எந்தவிதப் போராட்டமும் நடத்துவதில்லை.

விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினத்தைக் குறைக்கும் நோக்குடன் அரசு பணியாற்றுவதாக அவர் கூறினார். விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினங்களைக் குறைக்க உதவும் வகையில் மண்வள அட்டை, யூரியா மீது வேம்புப் பூச்சு, சூரியசக்திக் குழாய்கள் வழங்குதல் போன்ற விவசாயிகளை மையமாகக் கொண்ட பல்வேறு அரசுத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். விவசாயிகளுக்கு மேலும் சிறந்த வகையிலான விவசாயக் காப்பீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு முயன்று வருகிறது என்றும் அவர் கூறினார். இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் பயிர்களுக்கு நியாய விலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயன்றதாக பிரதமர் கூறினார். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த சாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரையின் பேரில் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு தொகையை குறைந்தபட்ச ஆதரவு விலையாக அரசு நிர்ணயித்தது என்று அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்ட பயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.