அழகர் மலையின் காவல்காரன் 18 படிக்க சொந்தக்காரன் கருப்பன் உடைய வரலாறு…

0
Follow on Google News

அழகர் மலையின் காவலன், மதுரை மக்களுக்கும் காவலன், சந்தனக் கதவுக்கு சொந்தக்காரன், பதினெட்டாம் படிக்கு காவல் அதிகாரி, நம்ம அழகருக்கு காவலா பதினெட்டாம் படி கருப்பு நின்ன கதையப் பத்தித்தான் பார்க்கப்போறோம். கேரளா தேசத்தை ஆண்டு வந்த அரசன் ஒருவன் ஒருமுறை பாண்டிய நாட்டுல அழகர் குடிகொண்டு இருக்கிற திருமாலிருஞ்சோலைக்கு வந்தான்.அங்க அழகே உருவான கள்ளழகரை தரிசிச்ச அவனுக்கு, அழகரோடு அழகு ரொம்பவும் ஈர்த்துப் போச்சு.

உடனே அவரை தன்னோட தேசமான கேரளாவுக்கு கொண்டுபோக திட்டம் போட்டான். பாதுகாப்பான கோட்டையிலிருந்து அழகரைக் கொண்டு போறது அவனுக்கு முடியாத ஒன்னா இருந்துச்சு. எனவே, நாடு திரும்பிய அந்த அரசன் மந்திர, தந்திரங்கள்ல தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செஞ்சு அழகரோடு சக்தியை எடுத்து அவரை கேரளாவுக்கு தூக்கிட்டு வரும்படி கட்டளையிட்டான். அந்த மந்திரவாதிகளுக்கு காவலா மலையாள தேசத்தோட காவல் தெய்வமான கருப்பையும் அனுப்பி வைச்சான. வெள்ளைக் குதிரையில ஏறி 18 மந்திரவாதிகளுக்கு காவலா அழகர் மலை நோக்கி கருப்பு முன்னே புறப்பட, மந்திரவாதிகளும் கருப்பை பின்தொடர்ந்தாங்க.

அழகரை எடுத்துட்டு போறதுக்கு முன்னாடி அவரோட சக்தியை வேறொரு இடத்துக்கு மாற்றுகிற முயற்சியில 18 மந்திரவாதிகளும் ஈடுபட்டாங்க. அதுக்காக ஆலயத்துக்குள்ள மறைஞ்சிருந்து மந்திரம் ஜபிக்க முடிவு பண்ணிணாங்க. அதுக்காக ஒரு மந்திர மையையும் பயன்படுத்துனாங்க. அந்த மைய கண்களோட இமைகள்ல பூசுனதும் அவங்க மறைஞ்சிடுவாங்க. இப்படி தந்திரமா இருந்து அழகரோட சக்தியை களவாட முயற்சி பண்ணுனாங்க.

இவங்கோளட திட்டத்தை முறியடிக்க திருவுள்ளம் கொண்ட அழகே உருவான அழகர், கோயில் பட்டர் ஒருத்தரோட கனவுல தோன்றி, மந்திரவாதிகள பத்தி எச்சரிச்சார். கண்விழிச்சு பார்த்த பட்டர் மந்திரவாதிகளை பிடிக்க ஒரு திட்டம் தீட்டினார். அதாவது மறுநாள் காலையில வைவேதியத்துக்கு வழக்கமாக செய்யுற தயிர்சாதத்துல அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுசும் அதை உருண்டையா உருட்டி வச்சாரு. அந்த தயிர்சாதத்தோட வாசனையால ஈர்க்கப்பட்ட அந்த மந்திரவாதிகள் அதை எடுத்து தின்ன ஆரம்பிச்சாங்க..

அடுத்த கணமே, அந்த சாதத்துல அதிகமா சேர்க்கப்பட்டிருந்த மிளகுனால உண்டான காரம் தாங்கமுடியாம அவங்க கண்ணீர் விட ஆரம்பிச்சாங்க. அந்த கண்ணீரால் கண் இமைகள்ல அவங்க பூசியிருந்த மை அழிய ஆரம்பிசுச்சு. மை அழிஞ்சதும் அவங்களோட மாய சக்தி மறைந்து உண்மையான உருவம் வெளிப்பட்டது. உடனே, அழகர் மலையிலிருந்த காவலர்கள் அந்த மந்திரவாதிகளை பிடிச்சு வெட்டிக் கொடூரமா கொன்னுட்டாங்க. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு படிக்கட்டா வைச்சு புதைச்சாங்க… மந்திரவாதிகளுக்குத் துணையாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் பிடித்துக் கட்டினர்.

ஆனால் அந்த காவல் தெய்வமோ, அழகரோட அழகுல மயங்கி, மந்திரவாதிகளுக்கு உடந்தையா வந்ததால அதற்கு பரிகாரமா இனிமே நான் இங்கிருந்து அழகருக்கு காவலா இருக்கிறதா சொல்லிச்சு. அதற்கு அழகரும் உத்தரவு தர, அன்னையிலிருந்து அழகருக்கு இந்த பதினெட்டாம் படி கருப்புதான் காவலா இருந்துட்டு வர்றாரு. அழகருக்கு காவலாக இருக்கிறதுக்கு கூலியா தினமும், அழகருக்குச் செய்யப்படும் அர்த்தஜாம நிர்மால்ய நைவேத்யங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்னைக்கும் அழகருக்கு கொடுக்கப்படுகிற அர்த்தஜாம நிர்மால்ய நைவேத்யங்கள் கருப்புவுக்கும் கொடுக்கப்படுறதா சொல்றாங்க.

அழகர் குடிகொண்டிருக்கிற ஆலயத்தின் சொத்துகள் முழுமைக்கும் அவர்தான் காவல். ‘அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது’ என்ற ஒரு சொலவடை உண்டு. அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் உண்டாம். திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேபோல திரும்பும்போதும், அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும். இன்னைக்கும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் இருந்துட்டு வருது.

பதினெட்டாம்படியோட வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு கிடையாது. பெரிய கதவே கருப்பனின் வடிவாக வணங்கப்படுகிறது. எப்போதும் இந்த கதவு மூடியே இருக்கும் இந்தக் கதவு, பிரம்மோற்சவத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளலுக்காக மட்டுமே திறக்கப்படும். அதனால மூடியிருக்கும் கதவுக்கே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பதினெட்டாம்படிக் கருப்பின் காவலைத் தாண்டி எதுவும் உள்ளே செல்ல இயலாது. தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கருப்பனின் சந்நிதியில் வைத்து, அது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டதுன்னு பிரமாணம் செய்தபிற்பாடுதான் உள்ளே கொண்டு செல்ல முடியும். கருப்பனிடம் செய்யும் பிரமாணம் நீதி தேவன் சந்நிதியில் செய்யும் பிரமாணத்துக்கு இணையானதுன்னு சொல்லப்படுது.

சுத்துப்பட்டு ஊர்ல இருப்பவங்க, தங்களுக்குள் எழும் பிரச்னைகள் பலவற்றுக்கும் கருப்பன் சந்நிதியில் பிரமாணம் சொல்லித் தீர்த்துக்கிறாங்க. கருப்பன் சந்நிதியில் பொய் சொன்னால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் அவங்க நம்பிக்கை. அழகர் கோயிலின் மற்றொரு சிறப்பு, அங்கு இருக்கும் சைவம் சார்ந்த இறைவழிபாடு. ‘திருப்பதிகளுக்கெல்லாம் முதன்மை திருமாலிருஞ்சோலை’ என்று பெயர்பெற்ற அழகர் கோயிலில் விநாயகர் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் காணப்படுகின்றன.

இரு சந்நிதிகளிலும் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. வீர சைவரான, லிங்காயத்து ஒருவரின் பெரிய சிலை ஒன்றும் ஆலயத்துள் காணப்படுகிறது. அந்த அளவுக்குச் சைவ – வைணவ வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆதரிக்கப்பட்டத் தலமாக அழகர்மலை இருந்துவந்துள்ளது.